இ-சிகரெட்டுக்கு தடை, ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் - மத்திய மந்திரி சபை முடிவு


இ-சிகரெட்டுக்கு தடை, ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் - மத்திய மந்திரி சபை முடிவு
x
தினத்தந்தி 19 Sept 2019 4:30 AM IST (Updated: 19 Sept 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் வழங்க மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து கூட்டம் முடிவடைந்த பிறகு, மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

2018-2019 நிதியாண்டுக்கு ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 11 லட்சத்து 52 ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள் பலன் அடைவார்கள்.

இந்த போனஸ் வழங்குவதால், மத்திய அரசுக்கு ரூ.2 ஆயிரத்து 24 கோடி செலவாகும்.

மோடி அரசு, கடந்த 6 ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தி சார்ந்த போனஸ் வழங்கி வருகிறது.

நாட்டின் உயிர்நாடியான ரெயில்வே துறையை இயக்குவதில் ஊழியர்கள் ஆற்றிய பணியை அங்கீகரிக்கும் வகையில் இந்த போனஸ் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் வருங்காலத்தில் மேலும் திறம்பட பணியாற்றவும், ரெயில்வேயை லாபத்தில் இயங்கச் செய்யவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், இ-சிகரெட் எனப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

இ-சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், வினியோகம் செய்தல், ஏற்றுமதி, இறக்குமதி செய்தல், சேமித்து வைத்தல், அனுப்புதல், விற்பனை செய்தல், விளம்பரம் செய்தல் ஆகிய அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக அவசர சட்டம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு அது அமலுக்கு வரும். அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், அவசர சட்டத்துக்கு மாற்றாக மசோதா கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், இ-சிகரெட் தடையை மீறுபவர்களுக்கான தண்டனை விவரங்களை மத்திய சுகாதார செயலாளர் பிரீத்தி சூடன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

முதல்முறையாக தடையை மீறுபவர்களுக்கு ஓராண்டுவரை சிறைத்தண்டனை அல்லது ரூ.1 லட்சம்வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். அடுத்தடுத்து தவறு செய்பவர்களுக்கு 3 ஆண்டுவரை சிறைத்தண்டனை அல்லது ரூ.5 லட்சம்வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

வருமுன் காப்பதே சிறந்தது என்பதால், இந்த தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story