உ.பி.-யில் அதிர்ச்சி - வரதட்சணைக்காக தாயும், 3 மாத சிசுவும் உயிருடன் எரித்துக் கொலை


உ.பி.-யில் அதிர்ச்சி - வரதட்சணைக்காக தாயும், 3 மாத சிசுவும் உயிருடன் எரித்துக் கொலை
x
தினத்தந்தி 19 Sept 2019 10:09 AM IST (Updated: 19 Sept 2019 11:35 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் வரதட்சணைக்காக தாய் மற்றும் 3 மாத பெண் சிசுவும் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராம்பூர்,

ஷப்னம் (25) மற்றும் முகமது காசிம் தம்பதியினர் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். காசிமும் அவரது குடும்பத்தினரும் பழ வியாபாரம் நடத்தி வந்தனர். ஷப்னத்திடம் முகமது காசிமும், அவரது தாயும் ரூ.2 லட்சம் வரதட்சணை கேட்டு நச்சரித்துள்ளனர். வரதட்சணை கொடுக்கவில்லை என்பதற்காக மாமியாரால் பல துன்புறுத்தலுக்கும், கொடுமைகளுக்கும் ஷப்னம் ஆளானார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, ஷப்னம் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். அந்த சமயத்தில் ஷப்னத்தின் சகோதரரான ஜாஹித் அலி ரூ. 1 லட்சம் ரொக்கப்பணத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளார். வரதட்சணை ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்தை கொடுத்த போதிலும் ஷப்னத்துக்கு எதிரான வரதட்சணை கொடுமை தொடர்ந்து நடந்து கொண்டே இருந்துள்ளது.

நேற்று முன்தினம் முகமது காசிமும், அவரது தாயாரும் சேர்ந்து ஷப்னம் மற்றும் அவரது 3 மாத பெண் சிசுவை வீட்டிற்குள் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்தனர். எரித்த பின்னர் முகமது காசிமும் அவரது குடும்பத்தினர் 7 பேர் வீட்டிலிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று எரிக்கப்பட்ட உடல்களை மீட்டனர்.  முகமது காசிம் மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேர் மீது போலீசார் கொலை மற்றும் வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இச்சம்பவம் குறித்து ராம்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் பால் சர்மா கூறியதாவது:-

தப்பி ஓடிய குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில், தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story