அமெரிக்க பயணம்: பல தலைவர்களுடன் உரையாடுவதற்கான நல்ல வாய்ப்பு - பிரதமர் நரேந்திர மோடி டுவீட்


அமெரிக்க பயணம்: பல தலைவர்களுடன் உரையாடுவதற்கான நல்ல வாய்ப்பு - பிரதமர் நரேந்திர மோடி டுவீட்
x
தினத்தந்தி 20 Sep 2019 3:48 PM GMT (Updated: 20 Sep 2019 3:48 PM GMT)

அமெரிக்காவில் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் பல தலைவர்களுடன் உரையாடுவதற்கான நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா புறப்படுகிறார்.  இன்று நள்ளிரவு புறப்பட்டு நாளை பிற்பகல் அமெரிக்கா சென்றடைய உள்ளார். முதல் கட்டமாக ஹூஸ்டன் நகரை சென்றடைகிறார். அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

அவர்களிடம் இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு பிரதமர்  நரேந்திர மோடி  அழைப்பு விடுக்கிறார். பின்னர் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள "ஹவுடி மோடி" நிகழ்ச்சியில் பங்கேற்க ஞாயிறன்று  (22-ம் தேதி) டெக்சாஸ் செல்கிறார். அங்கு இந்தியர்கள்  நரேந்திர மோடிக்கு மிக சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

24-ம் தேதி, தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக " தலைமையின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதன்பின்னர், நியூயார்க் நகரில் வருகிற 27 ம் தேதி நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி , உலக தலைவர்கள் மத்தியில்  உரையாற்றுகிறார்.

ஐ. நா. சபையில் உரையாற்றி விட்டு, அன்று இரவே அமெரிக்காவில் இருந்து பிரதமர் நரேந்திர  நரேந்திர மோடி, தாயகம் திரும்புவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க  பயணம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில்,  அமெரிக்காவில் மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தால் பல தலைவர்களை சந்திக்கும் நல்ல வாய்ப்பாக அமையும் என பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியதாவது:- 

நாளை 21 ம் தேதி முதல் 29ம் தேதி வரையில் அமெரிக்காவில் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் பல தலைவர்களுடன் உரையாடுவதற்கான நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.  ஐ.நா.வில் இந்தியா சார்பில் கொண்டாடப்பட உள்ள காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா அவரது எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக அமையும்.  கடந்த 5 ஆண்டுகளாக தூய்மை மற்றும் சுகாதாரத்தில் மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றி வருகிறோம் என பதிவிட்டுள்ளார்.

Next Story