முதலீடு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை: ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு


முதலீடு, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை: ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Sept 2019 5:45 AM IST (Updated: 21 Sept 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகைகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.

பனாஜி,

நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. 6 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு மிகக்குறைவாக பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது.

இந்தியாவில் முக்கிய தொழில் துறைகள் அனைத்தும் முடங்கிப்போய் உள்ளன.

இந்த மந்த நிலையை மாற்றி, பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் வகையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தொடர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

முதலில் மோட்டார் வாகனத்துறைக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் அவர் சலுகைகளை அறிவித்ததோடு, பணப்புழக்கத்தை அதிகரிக்க வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மூலதனம் வழங்கப்படும் என்றார்.

அடுத்து அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

மூன்றாவது நடவடிக்கையாக, வீட்டு வசதித் துறைக்கும், ஏற்றுமதி துறைக்கும் ரூ.70 ஆயிரம் கோடி சலுகைகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்த நிலையில் கோவா தலைநகர் பனாஜியில் நேற்று சரக்கு, சேவைவரி கவுன்சிலின் 37-வது கூட்டத்தில் பங்கேற்க வந்த நிர்மலா சீதாராமன், அங்கு நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பெரு நிறுவனங்களுக்கு அதிரடியாக சுமார் ரூ.1½ லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

இது நாட்டில் முதலீடுகளையும், பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையில் 4-வது நடவடிக்கையாக அமைந்துள்ளது.

பெரு நிறுவனங்களுக்கு சலுகை மழைபோல அமைந்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* பொருளாதார வளர்ச்சியையும், முதலீட்டையும் ஊக்குவிக்கும் வகையில், 2019-20-ம் நிதி ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தும் வகையில் வருமான வரிச்சட்டத்தில் ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதில், உள்நாட்டு பெரு நிறுவனங்களுக்கான வருமான வரி 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு பிற விலக்குகளோ, சலுகைகளோ வழங்கப்பட மாட்டாது.

இதுவரை பெரு நிறுவனங்களுக்கான வருமான வரி 30 சதவீதமாக இருந்தது.

இந்த நிறுவனங்களுக்கான வரி சர்சார்ஜ் (கூடுதல் கட்டணம்), செஸ் (மிகை வரி) உள்பட மொத்தம் 25.17 சதவீதமாக இருக்கும். மேலும், ‘மேட்’ என்று அழைக்கப்படுகிற குறைந்தபட்ச மாற்றுவரியும் செலுத்த வேண்டியது இல்லை.

* உற்பத்தி துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், அந்த வகையில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்னும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு பலம் சேர்க்கவும், வருமான வரி சட்டத்தில் இன்னும் ஒரு சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டு, 2019-20-ம் நிதி ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.

இதன்படி அக்டோபர் 1-ந் தேதியோ அல்லது அதன் பின்னரோ தொடங்கப்படுகிற புதிய தொழில் நிறுவனங்கள் 15 சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும்.

எந்த விலக்குகளையும், சலுகைகளையும் பெறாமல், 2023-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதியோ, அதற்கு முன்னதாகவோ உற்பத்தியை தொடங்கும் நிறுவனங்கள் இந்த பலனைப் பெற முடியும்.

இந்த நிறுவனங்கள் சர்சார்ஜ், செஸ் உள்பட எல்லாம் சேர்த்து மொத்தம் 17.01 சதவீதம் வரி செலுத்தினால் போதும். (பழைய வரி வீதம் 29.12 சதவீதமாக இருந்தது.)

* ஒரு நிறுவனம் சலுகை வரி முறையை தேர்வு செய்யாமல், வரி விலக்கு அல்லது சலுகை பெற்றால், அந்த நிறுவனம் முன் திருத்தப்பட்ட விகிதத்தில் வரி செலுத்த வேண்டும். இருப்பினும், வரி விடுமுறை காலம் முடிந்த பின்னர் அல்லது விலக்கு காலம் முடிந்ததும் சலுகை வரி முறைக்கு மாறலாம்.

அப்படி சலுகை வரி முறைக்கு மாறியதும், இத்தகைய நிறுவனம் 22 சதவீத வரி செலுத்தினால் போதும். அப்படி சலுகை முறைக்கு மாறிய பின்னர் அதில் இருந்து திரும்ப மாற முடியாது.

* விலக்குகளையும், சலுகைகளையும் பெறுகிற நிறுவனங்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் வகையில், அவற்றுக்கான குறைந்தபட்ச மாற்று வரி 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* மூலதன சந்தைக்கு நிதி ஓட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில், நிதி சட்டம் 2019-ன் பிரிவு 2-ல் அறிமுகப்படுத்தப்பட்ட அதிகரிக்கப்பட்ட சர்சார்ஜ், ஒரு கம்பெனியின் பங்கு விற்பனையால் வருகிற மூலதன ஆதாயத்துக்கும், பங்கு சார்ந்த நிதியின் மூலமாக கிடைக்கிற ஆதாயங்களுக்கும் பொருந்தாது.

* கைகளில் உள்ள பங்குகளை விற்பதன் மூலம் கிடைக்கிற தொகையின் மீதான செல்வ வரி விலக்கிக்கொள்ளப்படுகிறது.

* பட்டியலிட்ட நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அவை 2019-ம் ஆண்டு, ஜூலை 5-ந் தேதிக்கு முன்னர் பங்குகளை பங்குதாரர்களிடம் இருந்து சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து திரும்ப வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தால், அதற்கு எந்த வரியும் விதிக்கப்படாது.

அவசர சட்டத்தின் மூலமாக வருமான வரி சட்டம் 1961 மற்றும் நிதி சட்டம் 2019 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார்.

நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளை தொடர்ந்து மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், ஒரே நாளில் 1921 புள்ளிகள் அதிரடியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத உயர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story