சந்திரயான்-2 திட்டம் 98 % வெற்றி : இஸ்ரோ தலைவர் சிவன்
சந்திரயான்-2 திட்டம் 98 % வெற்றி பெற்றுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
பெங்களூரு,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அதனுடனான தொடர்பு இழக்கப்பட்டது.
இதனால் விக்ரம் லேண்டர் நிலவின் தரைப் பகுதியில் விழுந்திருக்கலாம் எனக் கருதப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர், நிலவின் தரைப்பகுதியில் ஒருபக்கம் சாய்ந்த நிலையில் விழுந்து இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து விக்ரம் லேண்டரைத் தொடர்புகொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த 14 நாட்களாக முயன்றபோதிலும் முடியவில்லை.
நிலவில் நாளை முதல் இரவுக்காலம் என்பதால் மைனஸ் 150 டிகிரிக்கும் மேல் குளிர் இருக்கும் என்பதால், விக்ரம் லேண்டரைத் தொடர்பு கொள்வது என்பது இனிமேல் இயலாது.
இந்த சூழலில் புவனேஷ்வரில் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- சந்திரயான்-2 திட்டம் இரு வகையில் செயல்படுத்தப்பட்டது . அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என 2 வகையாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அறிவியல் என்ற நோக்கத்தில் நாங்கள் முழுமையாக வெற்றி பெற்றுவிட்டோம்.
2-வதாக தொழில்நுட்பம் விஷயத்தில் வெற்றியின் சதவீதத்தை ஏறக்குறைய முழுமையாக அடைந்துவிட்டோம். இதன் காரணமாகவே சந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வரை வெற்றியை பெற்றுள்ளது என்று நாங்கள் கூறுகிறோம். விக்ரம் லேண்டரில் இருந்து தகவல்களை ஏன் பெற முடியவில்லை எங்கு தவறு நேர்ந்தது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகி்ன்றனர்.
எங்களின் அடுத்த திட்டம் ககன்யான் திட்டம். இந்தத் திட்டத்தின் இலக்குகளை அடுத்த ஆண்டுக்குள் அடைய நாங்கள் முயற்சி செய்வோம்.” இவ்வாறு சிவன் தெரிவித்தார்
Related Tags :
Next Story