ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு: நுகர்வோர் நலனுக்கான புரட்சிகரமான திட்டம் - மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் பேச்சு


ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு: நுகர்வோர் நலனுக்கான புரட்சிகரமான திட்டம் - மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் பேச்சு
x
தினத்தந்தி 21 Sep 2019 11:30 PM GMT (Updated: 21 Sep 2019 10:04 PM GMT)

ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டம் நுகர்வோர் நலனுக்கான புரட்சிகரமான திட்டம் என்று மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.

இம்பால்,

மணிப்பூர் மாநிலம் பிஸ்னுபூரில் உணவுப்பொருள் சேமிப்பு கூடத்தை திறந்து வைத்த மத்திய உணவு, பொதுவினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் பேசியதாவது:-

ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டத்தால் பயனாளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்குவது உறுதி செய்யப்படும். இந்த திட்டம் நுகர்வோர் நலனுக்கான புரட்சிகரமான திட்டம். அடுத்த ஆண்டு (2020) ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

அனைத்து மாநிலங்களுக்கும் இந்த திட்டத்தை அமல்படுத்த வசதியாக ரேஷன் கடைகளில் பில் போட பயன்படுத்தும் கையடக்க கருவியை (பி.ஓ.எஸ்.) பொருத்த மேலும் ஒரு வருடம் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 14 மாநிலங்களில் பில் போடும் கையடக்க கருவிகளை பொருத்தி அதன்மூலம் பொதுவினியோகம் செய்து வருகிறார்கள். இதில் திரிபுரா, இம்பால் ஆகியவை ஏறக்குறைய 100 சதவீத பணிகளை முடித்துள்ளன. அசாம், மிசோரம் மாநிலங்கள் 86 சதவீதம் மட்டுமே கருவியை பொருத்தி உள்ளது.

மணிப்பூர் மாநில மக்கள் பிரதமரின் ‘ஆயுஷ்மன் யோஜனா’ திட்டம் மூலம் வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி பெற கண்டிப்பாக முயற்சிக்க வேண்டும். சிறப்பாக பணியாற்றும் மணிப்பூர் மாநில உணவுத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.

மணிப்பூரில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருள் சேமிப்பு கூடத்திற்கு கடந்த 2015-ம் ஆண்டு ராம்விலாஸ் பஸ்வான் அடிக்கல் நாட்டினார். கட்டுமானப்பணிகள் முடிவடைந்ததையடுத்து தற்போது கிடங்கை திறந்து வைத்துள்ளார்.


Next Story