சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ தான் காஷ்மீரில் பயங்கரவாதம் வளர மிகப்பெரிய காரணம் - ராஜ்நாத் சிங்


சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ தான் காஷ்மீரில் பயங்கரவாதம் வளர மிகப்பெரிய காரணம் -  ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 22 Sep 2019 11:34 AM GMT (Updated: 22 Sep 2019 12:01 PM GMT)

சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ தான் காஷ்மீரில் பயங்கரவாதம் வளர மிகப்பெரிய காரணம் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாட்னா,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, 370-வது பிரிவு திரும்பப் பெறப்பட்டது குறித்து மக்களுக்கு பாஜக சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பீகார் தலைநகர் பாட்னாவில் மக்கள் விழிப்புணர்வு கூட்டம் பாஜக சார்பில் இன்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பாகிஸ்தான் ஏற்கெனவே நம்பிக்கை இழந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா எல்லைப் பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்று என்று அறிவுறுத்தியுள்ளார்.

அது மிகவும் நல்ல அறிவுரை தான். ஏனென்றால், அந்தத் தவறை அவர்கள் மீண்டும் செய்து இந்திய எல்லைக்குள் அத்துமீறினால் அவர்கள் பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்லமாட்டார்கள். கடந்த 1967, 1971-ம் ஆண்டு செய்த தவறுகளை செய்துவிடக்கூடாது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ தான் காஷ்மீரில் பயங்கரவாதம் வளர மிகப்பெரிய காரணம். ஜம்மு காஷ்மீரில் ரத்தக்கறை படிய பயங்கரவாதம் தான் காரணம். இனி எத்தனை பயங்கரவாதிகளை பாகிஸ்தான் உருவாக்கப்போகிறது என்பதை பார்ப்போம். 

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே அந்நாட்டுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கும். ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை நாட்டு மக்கள் மனதில் கொள்ள வேண்டும். இனிமேல் பாகிஸ்தானுடன் பேச்சு என்றால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டும் தான்.

பாகிஸ்தான் தொடர்ந்து பலூச்சி மக்களுக்கு எதிராகவும், பஸ்தூன் மக்களுக்கு எதிராகவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது.  இதுபோல் தொடர்ந்து பாகிஸ்தான் செய்து வந்தால், பாகிஸ்தான் வரும் காலங்களில் இன்னும் துண்டு துண்டாகச் சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story