தன்னை மூளைச் சலவை செய்ததாக நித்யானந்தா மீது ஸ்ரீ நித்தியா பிரியானந்தா புகார்
தன்னை மூளை சலவை செய்ததாக நித்யானந்தா மீது ஸ்ரீ நித்தியா பிரியானந்தா புகார் கூறியுள்ளார்.
பெங்களூரு
நித்தியானந்தாவிடம் சிஷ்யையாக சேர்ந்து ஆசிரமத்தில் இருந்த கனடிய பெண்ணொருவர், சாமியார் தன்னை மூளை சலவை செய்ததாக கூறியதோடு ஆசிரமத்தில் நடக்கும் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் குறித்து வீடியோவில் தெரிவித்துள்ளார்.
கனடாவை சேர்ந்த சாரா லேண்ட்ரி என்ற பெண் இந்தியா வந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் ருத்ரகன்னியாக துறவறம் பெற்றார். பின்னர் நித்தியானந்தாவால் ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்ப பிரியானந்தா என பெயர் சூட்டப்பட்டார். அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், நித்தியானந்தா சக்திமிக்கவர் என்று நம்பி கடந்த 2017 ஆம் ஆண்டு தான் நித்தியானந்தாவால் திருவனந்தபுரத்தில் உள்ள குருகுலத்திற்கு செல்ல பணிக்கப்பட்டேன்.
அங்குள்ள சிறுவர் சிறுமிகளுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் கணக்கு ஆரம்பித்து அதனை பயன்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொடுக்கும் பணி எனக்கு வழங்கப்பட்டது. அங்கு அதிகாலையில் அழுது கொண்டிருந்த இரு சிறுமிகளிடம் விசாரித்த போது தான் அங்கு நடக்கின்ற கொடுமைகள் எனக்கு தெரியவந்தது.
சிறுவர், சிறுமிகள் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டுள்ள அந்த குருகுலத்தில் அதிகாலையில் குச்சியால் அடித்து சிறுவர் சிறுமிகள் வலுக்கட்டாயமாக தூக்கத்தில் இருந்து எழுப்பப்படுவதாகவும், இயற்கை உபாதைகளை கழிக்க கூட அனுமதிப்பதில்லை என்றும் குருகுல ஆசிரியர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போதுதான் அனைவரும் இயற்கை உபாதைகளை கழிக்க செல்ல வேண்டும் என்ற கொடுமையான கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளதாகவும் சாரா தனது வீடியோவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிறுவர் சிறுமிகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டால் கடுமையான தண்டனை வழங்கப்படுவதாகவும், தனது மகனுக்கு நேர்ந்த கொடுமை குறித்து வினோதினி சங்கர் என்பவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டு இருப்பதையும் சாரா சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த கொடுமைகள் குறித்து நடிகை ரஞ்சிதாவிடம் கூறியதாகவும் அதற்கு அவர் எந்த ஒரு தீர்வும் காணவில்லை என்று கூறியுள்ள சாரா, நித்தியானந்தா தன்னை மூளை சலவை செய்து வைத்திருந்ததாகவும், அந்த சிறுவர் சிறுமிகளை சந்தித்து வந்தபின் அவரிடம் சக்தி இருப்பதாக கூறப்படுவது எல்லாம் பொய் என்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து ஆசிரமத்தில் இருந்து வெளியேறி கனடாவுக்கு சென்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார் சாரா.
இதற்கிடையே சாரா தெரிவித்துள்ள இந்த குற்றச்சாட்டு, மதத்தின் மீதான தாக்குதல் என்றும் நித்தியானந்தாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காகவும் அவர் இவ்வாறு கூறி வருவதாக நித்தியானந்தாவின் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story