டெல்லி, பஞ்சாப், அரியானா உள்பட வட மாநிலங்களில் நில நடுக்கம்: பாகிஸ்தானில் 20 பேர் பலி; ஏராளமான கட்டிடங்கள் சேதம்


டெல்லி, பஞ்சாப், அரியானா உள்பட வட மாநிலங்களில் நில நடுக்கம்: பாகிஸ்தானில் 20 பேர் பலி; ஏராளமான கட்டிடங்கள் சேதம்
x
தினத்தந்தி 25 Sep 2019 12:15 AM GMT (Updated: 24 Sep 2019 9:14 PM GMT)

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நேற்று கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வட மாநிலங்களில் மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். பாகிஸ்தானில் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்தன. இதனால் 20 பேர் பலியானார்கள்.

புதுடெல்லி,

வட இந்திய மாநிலங் களில் நேற்று திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்திய, பாகிஸ்தான் எல்லையை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளி களாக பதிவானது.

மாலை 4.33 மணிக்கு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் டெல்லி, பஞ்சாப், அரியானா, காஷ்மீர், இமாசல பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் அச்சத்துடனும், பதற்றத்துடனும் வீடுகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்களை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.

அவர்கள் வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர். எல்லோரது முகத்திலும் பீதியையும், கவலையையும் பார்க்க முடிந்தது.

இது தொடர்பாக பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்களையும், படங்களையும் பரிமாறிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் செல்போனில் தொடர்பு கொண்டும் விசாரித்துக்கொண்டனர்.

எனினும் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம், ஜீலம் நகர் அருகே நில நடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு புரட்டிப்போட்டது.

மாலை 4 மணிக்கு பிறகு ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ஜீலம் நகருக்கு வடக்கே 22.3 கி.மீ. தொலைவில் பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பிரிக்கும் எல்லையில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நில நடுக்கமானது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிர்பூரில்தான் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.

அங்கு நில நடுக்கத்தால் சாலைகள் பிளந்தன, பாலங்கள் சேதம் அடைந்தன. ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்தன. சாலையில் போய்க்கொண்டிருந்த வாகனங்கள் கவிழ்ந்தன. சாலையில் ஏற்பட்ட பிளவுகளில் பல வாகனங்கள் விழுந்தன.

பல இடங்களில் பரவலாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்தும், அலுவலகங்களில் இருந்தும், இன்ன பிற கட்டிடங்களில் இருந்தும் பதற்றத்துடன் வெளியே ஓட்டம் எடுத்தனர். இருப்பினும் ஆங்காங்கே இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மக்கள் ஓலமிட்டனர்.

இது தொடர்பான காட்சிகள் டி.வி. சேனல்களில் வெளியாகின.

இஸ்லாமாபாத், பெஷாவர், ராவல்பிண்டி, சியால்கோட், சர்கோதா, குஜராத், சிட்ரால், மாலகண்ட், முல்தான், ஷாங்கலா, பஜார், சுவாட், சாஹிவால், ரகீம் யார் கான் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நில நடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.

நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் பீதியில் கட்டிடங்களில் இருந்து பதறியடித்தவாறு வெளியே ஓடி வந்தனர்.

8 முதல் 10 வினாடிகள் நீடித்த நில நடுக்கத்தின் பாதிப்புகள், பாகிஸ்தானில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளன.

நில நடுக்கத்துக்கு பாகிஸ்தானில் 8 பேர் பலியானதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளிவந்தன.

பின்னர், 20 பேர் பலியானதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.



 



அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், நில நடுக்கம் குறித்த தகவல்கள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்தார்.

மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக முடுக்கி விடுமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேபோன்ற உத்தரவை ராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வாவும் பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து மீட்பு பணிகள் முழுவீச்சில் தொடங்கின.


Next Story