தமிழகம்-கேரளா நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண 10 பேர் கொண்ட குழு: எடப்பாடி பழனிசாமி-பினராயி விஜயன் பேச்சுவார்த்தையில் முடிவு


தமிழகம்-கேரளா நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண 10 பேர் கொண்ட குழு: எடப்பாடி பழனிசாமி-பினராயி விஜயன் பேச்சுவார்த்தையில் முடிவு
x
தினத்தந்தி 26 Sep 2019 12:15 AM GMT (Updated: 25 Sep 2019 9:58 PM GMT)

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் நேற்று திருவனந்தபுரத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழகம்-கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினைக்கு தீர்வு காண 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

திருவனந்தபுரம்,

நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது, பரம்பிகுளம்-ஆழியாறு நதிநீரை பங்கிட்டு கொள்வது, பாண்டியாறு, புன்னம்புழா ஆறுகளில் தண்ணீர் திறப்பது உள்ளிட்டவை தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே நிலவும் கருத்துவேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இரு மாநில அரசுகளும் விரும்புகின்றன.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, 2004-ம் ஆண்டு இதுதொடர்பாக அப்போதைய கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டியை சென்னையில் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் சந்தித்து இரு மாநிலங்களுக்கும் இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.

இதற்காக எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று திருவனந்தபுரம் சென்றார். பகல் 12.10 மணி அளவில் திருவனந்தபுரம் போய்ச் சேர்ந்த அவருக்கு விமானநிலையத்தில் கேரள மாநில அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், பேச்சுவார்த்தை நடைபெறும் மஸ்கட் நட்சத்திர ஓட்டலுக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு அவரை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் வரவேற்றனர்.

அதன்பிறகு மாலை 3 மணி அளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் தமிழக அரசு தரப்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கேரள அரசு தரப்பில் முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் அந்த மாநில நீர்வளத்துறை மந்திரி கே.கிருஷ்ணன் குட்டி மற்றும் தலைமைச் செயலாளர் டோம் ஜோஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது இரு மாநிலங்களுக்கும் இடையேயான தண்ணீர் பங்கீடு பிரச்சினைகளுக்கு சுமுகமான முறையில் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் எடப்பாடி பழனிசாமியும், பினராயி விஜயனும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

நதிநீர் பிரச்சினை தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் நடத்திய பேச்சுவார்த்தை சிறப்பான தொடக்கமாக அமைந்தது. கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்க இது வழிவகுத்து இருக்கிறது.

தமிழ்நாடு விவசாயிகள், கேரள விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் சகோதரர்களாக இருக்கின்றார்கள். இரு மாநிலங்களுக்கும் இடையேயான நீர் பங்கீட்டை பிரச்சினைகள் ஏதுமின்றி செயல்படுத்த குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இரு மாநில விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான நீரை முறைப்படி பங்கிட்டு வழங்குவதற்குத்தான் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கிறது.

இரு மாநில மக்களும் சகோதரத்துவத்துடன் பழகுகின்றார்கள். எவ்வித பாகுபாடுமின்றி கேரள மக்களும், தமிழக மக்களும் ஒன்றாக இணைந்து செயல்படுகின்ற சூழ்நிலை இன்றைக்கு உருவாகி உள்ளது. பல்வேறு பிரச்சினைகளையும் பேசி தீர்த்துக் கொள்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக இந்த பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறோம். இரு மாநில நீர் பங்கீட்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை இப்போது மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தனி குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அத்திட்டமும் நிறைவேற்றப்படும். மேலும் ஆனைமலை ஆறு, நீராறு, நல்லாறு திட்டம், சிறுவாணி பிரச்சினை போன்றவற்றிற்கும் தீர்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பினராயி விஜயன் கூறியதாவது:-

பரம்பிகுளம்-ஆழியாறு நீர் பங்கீடு திட்டம், ஆனைமலை, பாண்டியாறு-புன்னம்புழா, பம்பா அச்சன்கோவில் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நாங்கள் விரிவாக ஆலோசனை நடத்தினோம்.

இந்த பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண இரு மாநிலங்களின் சார்பிலும் தலா 5 பேர் அடங்கிய 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. செயலாளர்கள் மட்டத்திலான இந்த குழு ஒரு வாரத்தில் அமைக்கப்படும். அதன் பிறகு, முதல் கூட்டத்தை எப்போது நடத்துவது என்று அந்த குழு தீர்மானிக்கும்.

பரம்பிகுளம்-ஆழியாறு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன. அதை மறு ஆய்வு செய்வது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த குழு ஆலோசிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story