53 நாட்கள் ஆகியும் இயல்பு நிலை திரும்பாத காஷ்மீர்


53 நாட்கள் ஆகியும் இயல்பு நிலை திரும்பாத காஷ்மீர்
x
தினத்தந்தி 26 Sep 2019 10:15 AM GMT (Updated: 26 Sep 2019 10:15 AM GMT)

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 53 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அங்கு தொடர்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், வதந்திகள் பரவி வன்முறை வெடிக்காமல் இருப்பதற்காக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. பல்வேறு கட்டங்களாக கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா, குப்வாரா ஆகிய  பகுதிகளை தவிர்த்து ஏனைய இடங்களில் இணையதள சேவை இன்னும் வழங்கப்படவில்லை. 

அரசின் முடிவுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடக்கூடும் என்பதால், முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். எம்.பியும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 53 நாட்கள் ஆகியுள்ள போதிலும், அங்கு முழுவதுமாக இயல்பு நிலை திரும்பவில்லை. பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ள போதிலும்,  அச்சம் காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மறுக்கின்றனர்.

இதனால், பள்ளிகளில் மாணவர்கள் வருகை இல்லாமல் வெறிச்சோடி கிடக்கின்றன. சந்தைகள் இயங்கவில்லை. பொதுப்போக்குவரத்தும் முடங்கியுள்ளது. வீதிகளில் முக்கிய வணிக வளாகங்கள் மூடிக்கிடக்கின்றன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து உள்ளன. தனியார் வாகனங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. 

Next Story