பாலியல் புகார்: பாதிக்கப்பட்ட பெண் கைது ; இது தான் பாஜக நீதியா? -பிரியங்கா காந்தி ஆவேசம்


பாலியல் புகார்: பாதிக்கப்பட்ட பெண் கைது ; இது தான் பாஜக நீதியா? -பிரியங்கா காந்தி ஆவேசம்
x
தினத்தந்தி 26 Sep 2019 11:43 AM GMT (Updated: 26 Sep 2019 11:43 AM GMT)

சின்மயானந்தா வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை பணப்பறிப்பு வழக்கில் கைது செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, இது தான் பாஜக நீதியா? என மாநில அரசை கடுமையாக சாடியுள்ளார்.

புதுடெல்லி:

உத்தரபிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், பா.ஜ.க. தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் புகார் அளித்தார். புகாரின் பேரில் சின்மயானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி விசாரணை நடந்து வந்தது. 

இதையடுத்து கடந்த வாரம்  சிறப்பு விசாரணைக் குழுவினர் சின்மயானந்தாவை கைது செய்தனர். இதேபோல் சின்மயானந்தா தரப்பில் அளித்த புகாரின் அடிப்படையில், பாலியல் புகார் கூறிய சட்டக்கல்லூரி மாணவி பணப்பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி இவ்விவகாரம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

“உன்னாவ் பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொல்லப்பட்டார். உறவினர் கைது செய்யப்பட்டார். அதே போல் இந்த  வழக்கிலும் பாதிக்கப்பட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்திற்கும் பல்வேறு வகைகளில் நெருக்கடி அளிக்கின்றனர்.

குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர்கள் மீது போலீசார் வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்துகின்றனர். அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு கூட பதிவு செய்யப்படுவதில்லை, இது தான் பாஜக நீதியா?” என பிரியங்கா சாடியுள்ளார்.



Next Story