குடும்பத்தினர் மூலம் வெளியிடும் ப.சிதம்பரத்தின் ‘டுவிட்டர்’ பதிவுகள் வழக்கு விசாரணையை பாதிக்கிறது - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வாதம்


குடும்பத்தினர் மூலம் வெளியிடும் ப.சிதம்பரத்தின் ‘டுவிட்டர்’ பதிவுகள் வழக்கு விசாரணையை பாதிக்கிறது - டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. வாதம்
x
தினத்தந்தி 27 Sep 2019 11:30 PM GMT (Updated: 27 Sep 2019 8:45 PM GMT)

குடும்பத்தினர் மூலம் ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்துகளை வெளியிடுவது வழக்கு விசாரணையை பாதிப்பதாக டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பு வக்கீல் வாதிட்டார்.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நேற்று 5-வது நாளாக நடைபெற்றது.

அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் வாதாடுகையில், நிதி மந்திரியாக இருந்தபோது ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா நிர்வாகிகளையோ இந்திராணி முகர்ஜியையோ சந்தித்தது கிடையாது என்றும், இதுதொடர்பான விருந்தினர் பதிவேட்டை பரிசோதிக்கலாம் என்றும் கூறினார்.

அதன்பிறகு சி.பி.ஐ. தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில் கூறியதாவது:-

குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக ஆவணங்களும் ஆதாரங்களும் உள்ளன. அவரை ஜாமீனில் விட்டால் சாட்சியங்களை கலைக்கக் கூடும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது.

ஐ.என்.எக்ஸ். மீடியா உரிமையாளர் இந்திராணி முகர்ஜி குற்றத்தில் தொடர்பு உடையவர் மட்டும் அல்ல. அவர் அப்ரூவராக மாறி இருக்கிறார். 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் ப.சிதம்பரத்தை சந்தித்ததை சி.பி.ஐ. விசாரணையின் போது ஒப்புக்கொண்டு உள்ளார். அமைச்சகத்தில் அவரை சந்திக்க வந்தபோது பதிவான விருந்தினர் வருகை பதிவேடு அழிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் ஓபராய் ஓட்டலின் ஆவணங்களில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்திராணி முகர்ஜியும், பீட்டர் முகர்ஜியும் ப.சிதம்பரத்தை சந்தித்ததற்கு ஆதாரம் உள்ளது.

முதலீடு பெற அன்னிய முதலீடு மேம்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்கும் முன்னரே, ப.சிதம்பரத்தின் அறிவுரையின்படி அவர்கள் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்து உள்ளனர்.

தனது குடும்பத்தினர் மூலம் ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்துகளை வெளியிடுவது வழக்கின் விசாரணையை பாதிக்கிறது.

ப.சிதம்பரம் மிகுந்த செல்வாக்கு மற்றும் பணபலம் படைத்தவர். வேறு நாட்டில் சென்று குடியேறக் கூட வாய்ப்பு உள்ளது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் தான் தப்பிச் செல்லமாட்டேன் என அவர் கூறுவதை ஏற்க முடியாது, ஏனெனில் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர் வெளிநாடு தப்பிச் சென்று உள்ளார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படும் வரை ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து, நீதிபதி சுரேஷ்குமார் கைத், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இதற்கிடையே ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து முதலீடு பெற அனுமதி அளித்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நிதி ஆயோக் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சிந்துசிறி குல்லர், குறு சிறு நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அனுப் கே.பூஜாரி அப்போதைய நிதி அமைச்சக செயலாளர் பிரபோத் சக்சேனா, பொருளாதார துறை முன்னாள் கீழ்நிலைச் செயலாளர் ரவீந்திர பிரசாத் ஆகியோரையும் வழக்கில் சேர்த்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதாக டெல்லியில் நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story