விஜயசாந்தி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்


விஜயசாந்தி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 28 Sep 2019 6:10 AM GMT (Updated: 28 Sep 2019 6:12 AM GMT)

பிரபல நடிகை விஜயசாந்தி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா காங்கிரசில் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய பிரபல நடிகை விஜயசாந்தி மீண்டும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தசரா பண்டிகைக்கு முன்பாக விஜயசாந்தி பாஜகவில் இணைவார் என்றும் மராட்டிய சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர பிரமுகராக பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜயசாந்தி தென் மாநிலங்களில் மிகவும் பிரபலமானவர் என்பதால், பாஜகவில் அவர் இணைவது அக்கட்சிக்கு வலுசேர்க்கும் என்று பாஜக தலைவர்கள் நம்புகின்றனர்.  மராட்டிய மாநிலத்தில் 15 முதல் 20 தொகுதிகளில் விஜயசாந்தியை பிரசாரத்தில் ஈடுபடுத்த பாஜக டெல்லி தலைமை திட்டமிட்டுள்ளது. ஏனெனில், தெலுங்கானா மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் விஜயசாந்திக்கு என தனி செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது. 

விஜயசாந்தியை பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி  கட்சியில் இணைக்க தெலுங்கானா மாநில பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், டெல்லியில் பாஜக தலைமையை சந்தித்து விஜயசாந்தி கட்சியில் இணைவரா? அல்லது தெலுங்கானாவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி  கட்சியில் இணைவாரா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் விஜயசாந்தியுடன் கடந்த  15 நாட்களாக கட்சியில் இணைவது பற்றி ஆலோசித்து முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.  

1998 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த விஜயசாந்தி, அக்கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். பாஜக மகளிர் பிரிவு செயலாளராக இருந்த விஜயசாந்தி 1999 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கடப்பா மக்களவை தொகுதியில் சோனியா காந்திக்கு எதிராக பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.  எனினும், சோனியா காந்தி பெல்லாரி தொகுதிக்கு மாறியதால், விஜயசாந்தியும் போட்டியில் இருந்து விலகினார். பின்னர், தள்ளி தெலுங்கானா என்ற  தனிக்கட்சி ஆரம்பித்த விஜயசாந்தி, 2009 ஆம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் தனது கட்சியை இணைத்துக்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த விஜயசந்தி, 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

Next Story