அண்டை நாடு இந்தியாவை சீர்குலைக்க விரும்புகிறது; பாகிஸ்தானை மறைமுகமாக குறிபிட்ட ராஜ்நாத் சிங்


அண்டை நாடு இந்தியாவை சீர்குலைக்க விரும்புகிறது; பாகிஸ்தானை மறைமுகமாக குறிபிட்ட ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 28 Sep 2019 8:21 AM GMT (Updated: 28 Sep 2019 11:14 AM GMT)

அண்டை நாடு இந்தியாவை சீர்குலைக்க விரும்புகிறது என பாகிஸ்தானை மறைமுகமாக மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

மும்பை

பி -17 ஏ போர் கப்பல்களின் முதல் கப்பலான ஐ.என்.எஸ் நீலகிரி இன்று தொடங்கி வைக்கபட்டது. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்  முன்னதாக இந்தியாவின் இரண்டாவது  நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ்.கந்தேரியை மும்பையில்  தொடங்கி வைத்தார். ஐ.என்.எஸ் நீலகிரி இந்திய கடற்படையின் ஏழு புதிய சக்தி வாய்ந்த போர் கப்பல்களில் முதன்மையானது, இதில்  சிறப்பான அம்சங்கள் அடங்கி உள்ளன. மேலும் ஆயுதங்கள் மற்றும்  சென்சார்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் போர் கப்பல் ஐ.என்.எஸ் நீலகிரியை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் முன்னேறி வருகிறோம், நமது  வணிக நலன்கள் விரிவடைந்து வருகின்றன. இதன் மூலம், நமக்கு  ஆபத்துகளும் பெரிதாகி வருகின்றன. இந்த யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் அரசால் வழங்கப்படும் பயங்கரவாதம் ஒரு பெரிய சவால், "நமது  அண்டை நாடு" இந்தியாவை சீர்குலைக்க விரும்புகிறது.

எங்கள் அரசாங்கம் வலுவான நிலையில்  உள்ளது, எப்போது வேண்டும் என்றாலும் கடுமையான முடிவுகளை எடுக்க நாம் தயங்குவதில்லை. 370-வது சட்டபிரிவை நீக்கியது அத்தகைய முடிவுகளில் ஒன்று.

இன்று, இந்தியா ஒரு உயரடுக்கு நாடுகளை சேர்ந்து உள்ளது. அவை தங்கள் சொந்த விமானம் தாங்கிகள் மற்றும்  தந்திரோபாய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குகின்றன. அதுபோல் பல்வேறு கப்பல் கட்டடங்களில் உள்ள மொத்த 51 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் 49  கப்பல்கள் உள்நாட்டிலேயே கட்டப்பட்டு உள்ளன.

கடல் வழித்தடங்களில் கொள்ளை சம்பவங்களைத் தடுக்க கடற்படை தயாராக உள்ளது. நமது வர்த்தகத்தின் பெரும் பகுதி கடல் பாதை வழியாக நடைபெறுவதால், கடற்கொள்ளை, பயங்கரவாதம் அல்லது மோதல் காரணமாக கடல்வழி வர்த்தகத்தில் சிறிதளவு இடையூறு ஏற்படுவது கூட நமது பொருளாதார வளர்ச்சி மற்றும் நல்வாழ்வில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். 

கடற்படையை நவீனமயமாக்குவதற்கும் அதில்  சிறந்த தளங்கள், ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் அமைக்க  நாங்கள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

ஐ.என்.எஸ் நீலகிரி மற்றும் இத்திட்டத்தின் மற்ற ஆறு கப்பல்கள் “நாட்டின் தகுதியான தூதர்கள் என நிரூபிக்கும். இந்தியாவின் கப்பல் கட்டும் வலிமையைக் காட்டும் மற்றும் இந்தியாவின் அமைதி மற்றும் வலிமை பற்றிய செய்தியை உலகம் முழுவதும் பரப்புகிறது என்று ராஜ்நாத் சிங்  நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story