டெல்லியில் கிலோ ரூ.24-க்கு வெங்காயம் விற்பனை - ரேஷன் கடைகள் மூலம் வினியோகம்


டெல்லியில் கிலோ ரூ.24-க்கு வெங்காயம் விற்பனை - ரேஷன் கடைகள் மூலம் வினியோகம்
x
தினத்தந்தி 28 Sep 2019 11:00 PM GMT (Updated: 28 Sep 2019 7:46 PM GMT)

நாட்டின் பிற பகுதிகளில் வெங்காயம் கிலோ ரூ.80-ஐ கடந்திருக்கும் நிலையில், டெல்லியில் மாநில அரசு சார்பில் ரூ.23.90-க்கு விற்கப்படுகிறது. இந்த விற்பனையை முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேற்று தொடங்கிவைத்தார்.

புதுடெல்லி,

இந்திய மக்களின் சமையலறையில் முக்கிய இடம்பிடித்து வரும் வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் வெங்காயம் கிலோ ரூ.80-க்கு மேல் விற்பனையாகிறது. தலைநகர் டெல்லியிலும் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது.

இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் டெல்லியின் 70 சட்டசபை தொகுதிகளிலும் நியாயமான விலையில் வேன்கள் மூலம் 100 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என முதல்-மந்திரி கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்தார்.

அதன்படி இந்த விற்பனையை நேற்று அவர் தொடங்கி வைத்தார். இதற்காக மாநில தலைமை செயலகத்தின் முன் 70 லாரிகளில் வெங்காயம் கொண்டு வரப்பட்டு இருந்தன. அவற்றை கொடியசைத்து கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

இந்த வெங்காயம் ரேஷன் கடைகள் மூலமும், வேன்கள் மூலமும் பொதுமக்களுக்கு கிலோ ரூ.23.90-க்கு வழங்கப்படும். இந்த திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக 5 கிலோ வெங்காயம் கிடைக்கும். இந்த வெங்காய விற்பனை மையங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும்.

இந்த வெங்காயம் பெறுவதற்கு அடையாள அட்டை எதுவும் தேவை இல்லை எனக்கூறிய கெஜ்ரிவால், மக்கள் தங்கள் குடும்ப தேவைக்கு மட்டுமே நேர்மையாக வாங்கி செல்லுமாறும் கேட்டுக்கொண்டார். இந்த திட்டத்துக்காக நாளொன்றுக்கு 1 லட்சம் கிலோ வெங்காயம், முதல் 5 நாட்களுக்கு மத்திய அரசிடம் இருந்து வாங்கப்படும் எனவும், பின்னர் தேவையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் எனவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

வெங்காயம் விலை குறையும் வரை டெல்லி அரசின் இந்த நியாயவிலை நடவடிக்கை தொடரும் எனவும் அவர் உறுதி தெரிவித்தார்.


Next Story