பாட்னா நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது: பீகாரில் மழைக்கு 13 பேர் பலி


பாட்னா நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது: பீகாரில் மழைக்கு 13 பேர் பலி
x
தினத்தந்தி 29 Sep 2019 10:37 PM GMT (Updated: 29 Sep 2019 10:37 PM GMT)

பீகார் மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர். பாட்னா நகரம் எதிர்பாராமல் பெய்த பலத்த மழையால் வெள்ளத்தில் மிதக்கிறது.

பாட்னா,

உத்தரபிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. இதில் பீகார் மாநிலத்தில் கடந்த 48 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. அந்த மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மழை பெய்தாலும் குறிப்பாக பாட்னா, பாகல்பூர், கைமூர் ஆகிய 3 மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது.

இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. வீடுகள், ஆஸ்பத்திரிகள், துணை மின்நிலையங்கள் என பல்வேறு கட்டிடங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. மழை வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்தும், ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

பாட்னா, தானாபூர் மற்றும் சில சிறிய ரெயில் நிலையங்கள் வழியாக செல்லும் 30 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரெயில்கள் பாதியாக ரத்துசெய்யப்பட்டும், வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டும் உள்ளன. பல இடங்களில் பழைய வீடுகள், மண் வீடுகள் இடிந்துவிழுந்தன. ஏராளமான மரங்களும் விழுந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

பாகல்பூரில் மாவட்டத்தில் ஒரு கோவில் சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்ததில் 3 பேர் இறந்தனர். காஞ்சார்பூர் பகுதியில் ஒரு வீடு மண்ணில் புதைந்ததில் பலர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர். தானாபூரில் ஒரு ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஒரு வயது பெண் குழந்தையும், 3 பெண்களும் பலியானார்கள். மாநிலம் முழுவதும் கடந்த 48 மணி நேரத்தில் 13 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. ஆனால் பாட்னா நகரில் எதிர்பாராதவிதமாக கனமழை பெய்துவருகிறது. இதனால் வானில் இருந்து பார்க்கும்போது பாட்னா நகரம் மிகப்பெரிய ஏரி போலவும், கட்டிடங்கள் சிறு புள்ளிகளாகவும் தெரிகிறது. வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து அந்த மாநிலத்தில் சராசரியாக 200 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

முதல்-மந்திரி நிதிஷ்குமார் காணொலிகாட்சி மூலம் மாவட்ட கலெக்டர்களுடன் மழை நிலவரம் மற்றும் நிவாரண பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “எங்களால் முடிந்த அளவு நிவாரண நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். மக்கள் அனைவரும் அமைதியாகவும், பொறுமையுடனும் இருக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பலத்த மழைக்கு கடந்த 3 நாட்களில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 35 பேரும், குஜராத்தில் 3 பேரும், உத்தரகாண்ட், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 13 பேரும் பலியாகி உள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் மழை காரணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மழையால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் போதுமான நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மத்திய அரசும் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும். காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story