பாலகோட் போன்று மற்றொரு தாக்குதலை நடத்த தயாராவோம்; விமான படை புதிய தளபதி பேட்டி


பாலகோட் போன்று மற்றொரு தாக்குதலை நடத்த தயாராவோம்; விமான படை புதிய தளபதி பேட்டி
x
தினத்தந்தி 30 Sep 2019 7:30 AM GMT (Updated: 30 Sep 2019 7:30 AM GMT)

இந்திய விமான படை தளபதியாக ஆர்.கே. சிங் பதவுரியா இன்று பொறுப்பேற்று கொண்டார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் இந்திய விமான படையின் புதிய தளபதியாக ராகேஷ் குமார் சிங் பதவுரியா இன்று பொறுப்பேற்று கொண்டார்.  இதன்பின் தேசிய போர் நினைவு சின்னத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு பின் அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசினார்.  ரபேல் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், ரபேல், திறன் வாய்ந்த போர் விமானம்.  இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஒன்றாக இருக்கும்.  பாகிஸ்தான் மற்றும் சீனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கான சிறந்த ஆயுதம் ஆக இருக்கும் என கூறினார்.

வருங்காலத்தில் பாலகோட் தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதலை நடத்த இந்திய விமான படை சிறந்த முறையில் தயாராக இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த பதவுரியா, அப்பொழுது தயாராக இருந்ததுபோன்று அடுத்த முறை தாக்குதல் நடத்துவதற்கும் தயாராவோம்.  எந்தவொரு சவாலையும், எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராவோம்.

பாகிஸ்தானில் பாலகோட் தீவிரவாத இயக்க முகாம்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகின்றன என்ற தகவல், எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.  தேவையானபொழுது, வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என்றும் அதுபற்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் கூறினார்.

இந்தியாவுடன் அணு ஆயுத போர் ஏற்பட கூடும் என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் எச்சரிக்கை பற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில், அணு ஆயுதங்கள் பற்றிய அவர்களது புரிதல் அது.  அணு ஆயுதங்கள் பற்றிய சொந்த புரிதல் மற்றும் பகுப்பாய்வுகள் எங்களிடம் உள்ளன.  எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராவோம் என்று அவர் கூறியுள்ளார்.

Next Story