காஷ்மீரில் இயல்பு நிலை தொடர்ந்து பாதிப்பு


காஷ்மீரில் இயல்பு நிலை தொடர்ந்து  பாதிப்பு
x
தினத்தந்தி 30 Sep 2019 9:47 AM GMT (Updated: 30 Sep 2019 9:47 AM GMT)

காஷ்மீரில் 57-வது நாளாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், வதந்திகள் பரப்பப்பட்டு வன்முறை ஏற்பட்டு விடக்கூடும் என்பதால், அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

தற்போது, அங்கு படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மொபைல்போன் சேவைகளைத் தவிர வேறு எந்த கட்டுப்பாடுகளும் பள்ளத்தாக்கு பகுதிகளில் எங்குமே இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், தொடர்ந்து 57-வது நாளாக காஷ்மீரில் இயல்பு நிலை முடங்கியுள்ளது. 

பல இடங்களில் கடைகளை திறக்கக் கூடாது என்று  சமூக விரோதிகள் மிரட்டுவதாலும், வாகனங்களுக்கு தீ வைக்கப்படுவதாலும்  இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  மக்கள் மிரட்டப்படுவது குறித்தும் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பிரதான சந்தைகள் மற்றும் பொது போக்குவரத்து முடங்கியுள்ளது. இருப்பினும், தனியார் கார்கள், கேப்ஸ்கள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. மாணவர்கள் வருகை போதிய அளவு இல்லாததால், பள்ளிகளின் செயல்பாடும் பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story