இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா பதவியேற்பு


இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா பதவியேற்பு
x
தினத்தந்தி 30 Sep 2019 5:36 PM GMT (Updated: 30 Sep 2019 5:36 PM GMT)

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா இன்று பதவியேற்றுக்கொண்டார்.

புதுடெல்லி,         

இந்திய விமானப்படையின் தளபதியாக கடந்த நான்கு ஆண்டுகளாக பதவி வகித்து வந்த பி.எஸ்.தனோவா பணியில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார்.

இதையடுத்து,இந்திய விமானப்படையின் 26வது புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா இன்று பதவியேற்றுக்கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே மத்திய அரசு இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

1980ல், விமானப்படையில் சேர்ந்த பதாரியா, 'ஜாகுவார்' படைப்பிரிவில் பல ஆண்டுகள் பணியாற்றினார். இதுவரை, 4,250 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவம் உடைய பதாரியா, 26 வகையான போர் விமானங்களை இயக்கும் திறமை பெற்றவர். விமானங்களை இயக்குவதிலும், வழிகாட்டுவதிலும், எதிரி விமானங்களை தாக்குவதிலும் தகுதி பெற்றவர். 

கடந்த பிப்ரவரி மாதம் பாலகோட் அருகே பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை தாக்கும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதில் பதாரியாவின் பங்கு முக்கியமானது.

இன்று பதவியேற்றுக் கொண்ட பதாரியா தேசிய போர் நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், “இந்திய விமானப்படை, எந்த வகையான அச்சுறுத்தலையும் எதிர்கொண்டு முறியடிக்க தயாராக உள்ளது. பாலக்கோட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் போல், மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தவும், இந்திய விமானப்படையினர் தயாராக உள்ளனர். ரபேல் போர் விமானங்களின் வருகையால், இந்திய விமானப்படை மேலும் பலம் அடையும். விமானப் படையை நவீன மயமாக்குவதற்கு முன்னுரிமை அளிப்பேன்” என்று கூறினார்.


Next Story