அதிமுக கட்சியை தடை செய்ய வேண்டும்; தேர்தல் ஆணையத்தில் திமுக எம்எல்ஏ சரவணன் மனு
தேர்தல் விதிமுறைகளில் முறைகேடு செய்ததாக கூறி, அதிமுக கட்சியை தடை செய்ய வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக எம்எல்ஏ சரவணன் மனு அளித்து உள்ளார்.
புதுடெல்லி,
கடந்த 2016ல் நடைபெற்ற, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் வழக்கு தொடர்ந்தார். அதில், 'போஸ்க்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் படிவத்தில் பதிவு செய்யப்பட்ட ஜெயலலிதாவின் கைரேகை போலியாக உள்ளது. அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்' என கோரியிருந்தார். இந்த வழக்கு நடந்த போது ஏ.கே.போஸ் மரணமடைந்தார்.
வழக்கின் இறுதியில், சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பில், 'ஜெயலலிதாவின் கைரேகை, மிகவும் சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதால், அப்படிவத்தை, தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்திருக்க வேண்டும். 'வேட்புமனுவில் கைரேகை இடலாம் என சட்டத்தைத் திருத்தி, கடிதம் வாயிலாக தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது சட்ட விரோதமானது. எனவே, ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது' என கூறியிருந்தது.
ஜெயலலிதா கைரேகை வழக்கில், சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், போலி கையெழுத்திட்ட படிவம் வழங்கிய, அ.தி.மு.க.,வை தடை செய்ய வேண்டும். சட்டத்தை திருத்தி, கடிதம் வாயிலாக ஒப்புதல் அளித்த, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில், திமுக எம்எல்ஏ சரவணன் மனு அளித்து உள்ளார்.
Related Tags :
Next Story