விமானத்திற்காக கஷ்டப்பட வேண்டிய நிலையில் பாகிஸ்தான் பிரதமர் உள்ளார்- ராஜ்நாத் சிங்
விமானத்திற்காக கஷ்டப்பட வேண்டிய நிலையில் பாகிஸ்தான் பிரதமர் உள்ளார் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் இன்று ராணுவ கணக்குகள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் செலவுகள் மற்றும் கணக்குகளை நிர்வகிப்பதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.
தேசிய பாதுகாப்பு என்பது பல பரிமாணங்களை கொண்டது என்றும் பொருளாதார வலிமை, ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவை மிகவும் முக்கியமானவை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் தொலை தூரத்தில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு உதவி செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் குறித்துப் பேசிய அவர், “மோசமான நிதி மேலாண்மைக்கு நமது அண்டை நாடு மிகப்பெரிய உதாரணமாக உள்ளது. ராணுவமயமாக்கல் மற்றும் தவறான கொள்கைகளில் அதிக கவனம் செலுத்தியதால் பாகிஸ்தான் பிரதமர் சர்வதேச நிகழ்வுகளில் கலந்து கொள்ள விமானத்திற்காக கஷ்டப்பட வேண்டிய நிலையில் உள்ளார்” என்றார்.
கடந்த மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐக்கிய நாடுகள் பொது சபையில் கலந்து கொள்வதற்காக , சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஏற்பாடு செய்த சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றதை விமர்சிக்கும் விதத்தில் ராஜ்நாத் சிங் இவ்வாறு பேசியுள்ளார்.
Related Tags :
Next Story