காஷ்மீர் அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள்: ஆளுநரின் ஆலோசகர் தகவல்
காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்கப்படுவார்கள் என்று ஆளுநரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
50 நாட்களுக்கும் மேலாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என்பதால் அங்குள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஜம்முவில் தொகுதி மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாயத் ராஜ் அமைப்பின் இரண்டாவது கட்ட நிர்வாக முறையாக தொகுதி மேம்பாட்டு கவுன்சில் ஜம்முவில் பின்பற்றப்படுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு ஜம்முவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் தலைவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், நிலமையை ஆய்வு செய்த பின்னர் படிப்படியாக காஷ்மீர் அரசியல் தலைவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா உள்பட 400 க்கும் மேற்பட்ட அரசியல் பிரமுகர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்ட தொகுதி மேம்பாட்டு கவுன்சிலுக்கு வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story