பண்டிகை காலத்தில் நாசவேலையில் ஈடுபட டெல்லியில் 4 பயங்கரவாதிகள் ஊடுருவல் முக்கிய இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை


பண்டிகை காலத்தில் நாசவேலையில் ஈடுபட டெல்லியில் 4 பயங்கரவாதிகள் ஊடுருவல் முக்கிய இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 4 Oct 2019 3:30 AM IST (Updated: 4 Oct 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

பண்டிகை காலத்தில் நாசவேலையில் ஈடுபடுவதற்காக டெல்லியில் 4 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி, 

பண்டிகை காலத்தில் நாசவேலையில் ஈடுபடுவதற்காக டெல்லியில் 4 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து முக்கிய இடங்களில் போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தினர்.

பயங்கரவாதிகள் ஆத்திரம்

பயங்கரவாதிகளின் எளிய இலக்காக இருந்து வந்த காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சாசனம் வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி அதிரடி நடவடிக்கை எடுத்தது.

மேலும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக்கி தனது நேரடி கட்டுப்பாட்டின்கீழ் மத்திய அரசு கொண்டு வந்திருப்பது பாகிஸ்தானுக்கும், அங்குள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைவர்கள் உயிருக்கு குறி

இதன் காரணமாக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவல் ஆகியோரின் உயிருக்கு பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பதாக உளவு தகவல்கள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து அவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் காஷ்மீர் மற்றும் அதைச்சுற்றியுள்ள இடங்களில் அமைந்துள்ள விமானப்படை தளங்களில் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு சதி செய்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதை அடுத்து அங்கெல்லாம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பும் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் பயங்கரவாதிகள்

இந்தநிலையில், இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்க உள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில், துர்கா பூஜை, ராமலீலா, தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வருகிறார்கள்.

இந்தநிலையில் பண்டிகை காலத்தில் நாச வேலையில் ஈடுபடுவதற்காக ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதிகள் 4 பேர் டெல்லியில் ஊடுருவி உள்ளதாக போலீஸ் துறைக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து டெல்லி போலீஸ் துறை உஷாராகி உள்ளது.

அதிரடி சோதனைகள்

டெல்லி போலீஸ் துறையின் சிறப்பு படையினர் விமான நிலையம், ரெயில் நிலையம், மக்கள் கூடுமிடங்கள், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் என முக்கிய இடங்களில் நேற்று அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். இந்த சோதனைகள் தொடரும் என தகவல்கள் கூறுகின்றன.

மேலும் கண்காணிப்பு, ரோந்து பணியிலும் டெல்லி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story