கோரேகான்பீமா வழக்கு விசாரணை: மேலும் ஒரு நீதிபதி விலகல்


கோரேகான்பீமா வழக்கு விசாரணை: மேலும் ஒரு நீதிபதி விலகல்
x
தினத்தந்தி 4 Oct 2019 3:45 AM IST (Updated: 4 Oct 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவைச் சேர்ந்த கிராமிய பாடகர் வரவர ராவ் உள்ளிட்ட 5 பேர் மீது சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

புதுடெல்லி, 

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் கோரேகான் பீமா என்ற இடத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆர்வலர் கவுதம் நவ்லாகா, ஆந்திராவைச் சேர்ந்த கிராமிய பாடகர் வரவர ராவ் உள்ளிட்ட 5 பேர் மீது சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாவோயிஸ்டுகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக செயல்பட்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இவர்களில் கவுதம் நவ்லாகா, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஐகோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு அமர்வில் இருந்து கடந்த மாதம் 30-ந் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகினார். அந்த அமர்வில் இடம்பெற்று இருந்த நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை விலகிக் கொண்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரண், எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.ரவீந்திர பட், இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகிக்கொள்வதாக அறிவித்தார். இவர், இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகிய 5-வது நீதிபதி ஆவார்.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை வேறொரு அமர்வு வெள்ளிக்கிழமை (இன்று) முதல் விசாரிக்கும் என்று கவுதம் நவ்லாகாவின் வக்கீலிடம் மற்ற 3 நீதிபதிகளும் தெரிவித்தனர்.


Next Story