இந்திய தொழில் முனைவோருக்கு முதலீடு செய்ய வருமாறு வங்காள தேச பிரதமர் அழைப்பு
இந்தியாவில் உள்ள தொழில்முனைவோர்கள், வங்கதேசத்தில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என தான் விரும்புவதாக வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
4 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசினா, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். அந்த வகையில் டெல்லியில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், உலகளாவிய முதலீட்டாளர்கள் குறிப்பாக இந்திய தொழில்முனைவோர் வங்கதேசத்தில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கல்வி, மின்னணுவியல், வாகன தொழில், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு வங்கதேச பொருளாதாரம் 8.13 சதவிகிதமாக உள்ளதாக தெரிவித்த அவர், விரைவில் இரட்டை இலக்க வளர்ச்சியை பெறவுள்ளதாகவும் கூறினார்.
வங்கதேசம் சணல் உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும், அரிசி மற்றும் மாம்பழ உற்பத்தியில் நான்காவது இடத்திலும், உள்நாட்டு மீன்வளத்தில் ஐந்தாவது இடத்திலும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மற்ற நாடுகளை போலவே வங்கதேசத்திற்கும் சில சவால்கள் உள்ளதாக தெரிவித்த அவர், அந்த சவால்களை எவ்வாறு வாய்ப்புகளாக மாற்றுவது எனும் சூட்சுமம் தங்களுக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டார். அக்டோபர் 5ஆம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ஷேக் ஹசினா சந்தித்து பேசவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story