ராதாபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க கூடாது- உச்ச நீதிமன்றம்
ராதாபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் 19, 20, 21 ஆகிய சுற்றுகள் வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதற்கு தடை விதிக்கக் கோரி இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. அதேவேளையில், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று உத்தரவிட்டதோடு, வழக்கின் மறுவிசாரணையை வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை ஏன்?
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு நடந்தபோது, நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வக்கீல் ஐ.எஸ்.இன்பதுரை, தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில், அ.தி.மு.க. வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை 49 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அப்பாவு தேர்தல் வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த 1-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘ராதாபுரம் தொகுதியில் பதிவான 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை. 19, 20, 21 ஆகிய சுற்றுகள் எண்ணும்போது எங்களை அனுமதிக்கவில்லை என்று மனுதாரர் அப்பாவு தரப்பில் வாதிடப்பட்டது.
எனவே, இந்த 203 தபால் ஓட்டுகளையும், 19, 20, 21 ஆகிய சுற்றுகளையும் மீண்டும் எண்ண வேண்டும். 4-ந்தேதி (இன்று) நடைபெறும் இந்த மறு ஓட்டு எண்ணிக்கையை மேற்பார்வையிட ஒரு பதிவாளரை, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் நியமிக்கவேண்டும். இதற்காக நெல்லை மாவட்டத்தில் இருந்து தபால் ஓட்டுகள் மற்றும் 3 சுற்றுகள் பதிவான ஓட்டு எந்திரங்களை ஐகோர்ட்டு தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த ஓட்டு எண்ணிக்கைக்கு உதவி செய்ய தேர்தல் ஆணையத்தின் சார்பில் தகுந்த அதிகாரிகளை நியமிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story