மராட்டியத்தில் காங்கிரஸ் தோல்வியடையும், ராகுல் காந்தியின் விசுவாசிகள் இழிவுப்படுத்தப்படுகிறார்கள் - மூத்த காங்கிரஸ் தலைவர்
மராட்டியத்தில் காங்கிரஸ் தோல்வியடையும் என்றும் ராகுல் காந்தியின் விசுவாசிகள் கட்சியில் இழிவுப்படுத்தப்படுவதாக சஞ்சய் நிருபம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மும்பை,
ராகுல் காந்தியின் விசுவாசிகளுக்கு எதிராக கட்சிக்குள் சதித்திட்டம் தீட்டப்படுவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் இன்று தெரிவித்தார். கட்சியுடனான உறவை முறித்துக் கொள்வதாக அச்சுறுத்திய சஞ்சய் நிருபம், ஏனோதானோ என சீட் வழங்குவதால் வரவிருக்கும் மராட்டிய தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடையும் என கூறினார்.
மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபம் மேலும் கூறியதாவது;-
வெர்சோவாவில் எனக்கு விருப்பமான ஒரு வேட்பாளரை நிறுத்துமாறு நான் கேட்டிருந்தேன். டெல்லியில் ஒரு சதி நடைபெற்று வருகிறது, அங்கு ராகுல் காந்தியுடன் பணிபுரியும் மக்கள் இழிவுப்படுத்தப்பட்டு கட்சி அமைப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.
இதற்கு நான் ஒரு உதாரணம். அசோக் தன்வருக்கு நடந்ததை நீங்கள் பார்த்தீர்கள். திரிபுரா காங்கிரஸ் தலைவரும் இதே பிரச்சினையை எதிர்கொண்டார்.
எந்தவொரு கணக்கெடுப்பையும் நடத்தாமல் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. சோனியாவைச் சுற்றி வேலை செய்பவர்களுக்கு ஆதரவாக எல்லாம் நடக்கிறது.
ஏ.ஐ.சி.சி பொதுச் செயலாளர் என்ன சொன்னாலும் அது இறுதியானது என்று கருதப்படுகிறது. முன்னதாக, கீழ்மட்ட தொண்டர்களிடமிருந்து கருத்துகளை கேட்க கட்சி ஒரு அமைப்பை கொண்டிருந்தது. அந்த அமைப்பு இப்போது இல்லை. காங்கிரசில் ஒரு திட்டமிட்ட தவறு உள்ளது. அது சரி செய்யப்படாவிட்டால் அது கட்சியை சேதப்படுத்தும்.
நான் கட்சியை விட்டு வெளியேற விரும்புவேன் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் கட்சிக்குள் இருக்கும் விஷயங்கள் தொடர்ந்து இப்படி இருந்தால், நான் நீண்ட காலம் கட்சியில் இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. சஞ்சய் நிருபம் அல்லது ராகுல் காந்தியுடன் தொடர்புடைய எவரையும் இழிவுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நான் இதைக் கண்டித்து பிரசாரத்தில் பங்கேற்க மாட்டேன் என்று கூறினார்.
Related Tags :
Next Story