49 பிரபலங்களுக்கு எதிராக மத்திய அரசு எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை; மத்திய மந்திரி ஜவடேகர்


49 பிரபலங்களுக்கு எதிராக மத்திய அரசு எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை; மத்திய மந்திரி ஜவடேகர்
x
தினத்தந்தி 5 Oct 2019 3:46 PM IST (Updated: 5 Oct 2019 3:46 PM IST)
t-max-icont-min-icon

இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்களுக்கு எதிராக மத்திய அரசு எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று மத்திய மந்திரி ஜவடேகர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் நடக்கும் கும்பல் வன்முறையை கண்டித்தும், இதில் பிரதமர் தலையிட கோரியும், கடந்த ஜூலை 23ந்தேதி பிரபலமானவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர்.

இயக்குனர் மணிரத்னம், திரைப்பட தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல வங்காள திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, நடிகை ரேவதி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி, நடிகரும், இயக்குனருமான அனுராக் காஷ்யாப் உள்பட முக்கியமான பிரபலங்கள் 49 பேர் அந்த கடிதத்தை மோடிக்கு எழுதினர்.

அதில் அவர்கள், எங்கள் அன்பான இந்திய நாட்டில் சமீபகாலமாக பல்வேறு சோக சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை பார்க்கும்போது, அமைதியை விரும்பும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்ளும் எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.

முஸ்லிம்கள், தலித்துகள், பிற சிறுபான்மை இனத்தவர்களை கும்பல் அடித்து கொல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். 2016-ம் ஆண்டு தலித்துகளுக்கு எதிராக நாட்டில் 840-க்கும் மேற்பட்ட வன்முறைகள் நடத்தப்பட்டதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

அதேபோல் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்தை ஆயுதமாக்கி சிறுபான்மையினருக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவற்றை தடுக்க நீங்கள் (பிரதமர்) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கும்பலாக சேர்ந்து அடித்து கொல்லும் சம்பவங்களை நாடாளுமன்றத்தில் நீங்கள் கண்டித்தீர்கள். அது போதாது. அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

ராமர் பெயரில் சிறுபான்மையினரை பயமுறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள். கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை. எனவே, கருத்து வேறுபாடு கொண்டவர்களை ‘தேசத்துக்கு எதிரானவர்கள்’ என்றும், ‘நகர நக்சல்கள்’ என்றும் முத்திரை குத்திவிட கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரை சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், “49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் நாட்டின் தோற்றத்தை அவமானப்படுத்துவது போன்று இருக்கிறது. பிரதமர் மோடியின் பணியையும், செயலையும் குறைத்து மதிப்பிடுவது போல் இருக்கிறது. அதனால், அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார்.

இதையடுத்து, ஆகஸ்டு 20ந்தேதி முசாபர்பூர் தலைமை நீதிபதி சூர்ய காந்த் திவாரி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இந்தநிலையில் இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பீகார் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே, உத்தர பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று கலந்து கொண்டார்.  அவர் பேசும்பொழுது, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான பணிகள் ஒன்றாக மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆரே வனப்பகுதியில் மரங்கள் வெட்டுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசினார்.  தொடர்ந்து அவர், இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்களுக்கு எதிராக மத்திய அரசு எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும் கூறினார்.

Next Story