டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்துக்கு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை


டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்துக்கு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 5 Oct 2019 1:49 PM GMT (Updated: 5 Oct 2019 8:18 PM GMT)

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்துக்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் (வயது 74) கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில், செப்டம்பர் மாதம் 5-ந் தேதி முதல் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை வருகிற 17-ந் தேதி வரை நீட்டித்து கடந்த 3-ந் தேதி உத்தரவிட்ட தனிக்கோர்ட்டு நீதிபதி அஜய் குமார் குஹர், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஒரு நாளைக்கு ஒரு வேளை வீட்டு சாப்பாடு வழங்க அனுமதி அளித்தார். உடல் நல பாதிப்புக்கு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கலாம் என்றும், சிறை மருத்துவ அதிகாரி பரிந்துரைத்தால், அதன்பேரில் அவருக்கு எய்ம்ஸ் அல்லது ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கலாம் என்றும் அப்போது நீதிபதி கூறினார்.

இந்த நிலையில், ப.சிதம்பரத்துக்கு நேற்று மதியம் 1.30 மணிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிறையில் இருந்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன.

அதன் பிறகு இரவில் அவர் மீண்டும் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


Next Story