பரூக் அப்துல்லாவை சந்திக்க தேசிய மாநாட்டுக் கட்சிக் குழுவுக்கு அனுமதி


பரூக் அப்துல்லாவை சந்திக்க தேசிய மாநாட்டுக் கட்சிக் குழுவுக்கு அனுமதி
x
தினத்தந்தி 5 Oct 2019 5:25 PM GMT (Updated: 5 Oct 2019 5:25 PM GMT)

2 மாத வீட்டுச்சிறைக்குப் பின்னர் பரூக் அப்துலா மற்றும் உமர் அப்துல்லாவை சந்திக்க தேசிய மாநாட்டுக் கட்சிக் குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு முன்னெச்சரிக்கையாக அம்மாநில முன்னாள் முதல்-மந்திரிகளான உமர் அப்துல்லா,  அவரது தந்தை பரூக் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.

இதேபோன்று பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியும் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

இதனைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 2 மாத வீட்டுச் சிறையில் இருக்கும் உமர் அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லாவை சந்திக்க வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சி தரப்பில் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் அண்மையில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவை சந்திக்க தேசிய மாநாட்டுக் கட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரூக் அப்துல்லாவைச் சந்திக்க அக்கட்சியின் ஜம்மு மாகாணத் தலைவர் தேவேந்திர சிங் ராணா தலைமையில் 15 பேர் கொண்ட குழு நாளை காலை ஸ்ரீநகர் சென்று உமர் அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லாவை சந்தித்து பேச உள்ளதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் மதன் மந்தூ தெரிவித்துள்ளார்.

Next Story