“பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடவில்லை” - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு மந்திரி ஜவடேகர் பதில்


“பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடவில்லை” - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு மந்திரி ஜவடேகர் பதில்
x
தினத்தந்தி 6 Oct 2019 11:00 PM GMT (Updated: 6 Oct 2019 9:52 PM GMT)

பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடவில்லை என்று மத்திய மந்திரி ஜவடேகர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இது, முற்றிலும் அடிப்படையற்ற, பொய்யான குற்றச்சாட்டு. மத்திய அரசுக்கு எதிராக பேச எந்த பிரச்சினையும் இல்லாததால், எதிர்க்கட்சிகள் இப்படி கூறுகின்றன.

ஜாமீன் கொடுப்பதும், மறுப்பதும் யார்? கோர்ட்டுகள்தான் ஜாமீன் கொடுக்கின்றன. மத்திய அரசு கொடுப்பதில்லை.

வழக்கில் பூர்வாங்க ஆதாரம் இருப்பதால், சில தலைவர்களின் ஜாமீன் மனுக்களை கோர்ட்டுகள் நிராகரிக்கன்றன. அது கோர்ட்டு முடிவு, அரசின் முடிவு அல்ல.

மக்களுக்காக பா.ஜனதாவும், மத்திய அரசும் 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டிருக்கின்றன. அதனால், கடந்த 5 ஆண்டுகால சாதனைகளை எங்களால் பட்டியலிட முடியும்.

நாடு, ஒற்றை கட்சி முறையை நோக்கி போகிறதா என்பது பற்றி நாங்கள் எதுவும் கூற முடியாது. நாங்கள் மற்ற கட்சிகளை நடத்த முடியாது. நாங்கள் எந்த கட்சியையும் அழிக்கவில்லை. களத்தில் நிற்க வேண்டியதை அந்த கட்சிகள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நாங்கள் யாரையும் நிற்க வைக்க முடியாது.

பிற கட்சிகள் மீதான ஈர்ப்பு முடிந்து விட்டதால், மக்கள் பா.ஜனதாவை நோக்கி வருகிறார்கள். எல்லா கட்சிக்கும் தங்களை வளர்த்துக்கொள்ள உரிமை உண்டு. நாங்கள் எங்கள் சொந்த பலத்தில் வளர்கிறோம்.

மக்களிடம் இருந்து மேலும் மேலும் ஆதரவு கிடைத்து வருகிறது. ஒவ்வொரு வீட்டையும் அணுகி வருகிறோம். அப்புறம் என்ன பிரச்சினை? பா.ஜனதா எப்போதும் மக்களுடனே இருக்க விரும்புகிறது. மக்களுக்கு சாதகமான அரசை நடத்த விரும்புகிறது. நாட்டை முன்னெடுத்துச் செல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை மக்கள் வரவேற்கிறார்கள். இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.


Next Story