முடிவுக்கு வருகிறது தென்மேற்கு பருவ மழை- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்


முடிவுக்கு வருகிறது தென்மேற்கு பருவ மழை- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 9 Oct 2019 12:23 PM GMT (Updated: 9 Oct 2019 12:23 PM GMT)

ஒரு மாதத்திற்கும் மேலான தாமதத்திற்குப் பிறகு தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரப்போவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக வடமாநிலங்களில் இந்த ஆண்டு அதிக அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழையானது செப்டம்பர் மாத தொடக்கத்தில் முடிவுக்கு வருவது வழக்கமாகும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை மழைப்பொழிவு நீடித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வர ஆரம்பித்துள்ளதாகாவும் பஞ்சாப், அரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தானில் மழை முற்றிலும் குறைந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடமேற்கு இந்தியாவில் குறைந்த வெப்பமண்டல மட்டத்தில் ஏற்பட்டுள்ள சூறாவளி எதிர் சுழற்சி, வளிமண்டலத்தில் படிப்படியாக ஈரப்பதம் குறைதல் மற்றும் மழைப்பொழிவு குறைதல் ஆகிய காரணங்களால் தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

இது போன்ற மழைக்காலம் நீடிக்கும் நிகழ்வு கடந்த 1961(அக்டோபர் 1) ஆம் ஆண்டிலும், அதன் பின்னர் 2007(செப்டம்பர் 30) ஆம் ஆண்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் வடமேற்கு இந்தியாவின் மீதமுள்ள பகுதிகளிலும், அதற்கடுத்த 2-3 நாட்களில் மத்திய இந்தியாவிலும் மழை குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story