கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தால் வாழ்நாள் முழுவதும் சிறை: ஆயுதங்கள் சட்டத்தை திருத்த மத்திய அரசு திட்டம்


கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தால் வாழ்நாள் முழுவதும் சிறை: ஆயுதங்கள் சட்டத்தை திருத்த மத்திய அரசு திட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2019 4:15 AM IST (Updated: 12 Oct 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

கள்ளத்துப்பாக்கி தயாரித்தல், விற்பது, வைத்திருப்பது போன்ற குற்றங்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கும் வகையில் ஆயுதங்கள் சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது மொத்தம் 35 லட்சம் துப்பாக்கி லைசென்சுகள் வழங்கப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 13 லட்சம் பேர் துப்பாக்கி லைசென்ஸ் வைத்துள்ளனர். பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுவரும் காஷ்மீரில் 3.7 லட்சம் பேரும், பஞ்சாபில் 3.6 லட்சம் பேரும் துப்பாக்கி லைசென்ஸ் வைத்துள்ளனர்.

இவர்கள் பெரும்பாலும் தற்காப்புக்காக என்ற காரணத்தை கூறி துப்பாக்கி லைசென்ஸ் பெற்றுள்ளனர். இதுதவிர கள்ளத்துப்பாக்கிகளும் பெருமளவில் புழக்கத்தில் உள்ளன. தற்போது ஆயுத சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 7 வருடத்துக்கு குறையாமலும், அதிகபட்சம் ஆயுள் சிறை தண்டனையும் (14 ஆண்டுகள்) விதிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ஆயுத சட்டத்தின்கீழ் விதிக்கப்படும் தண்டனையை இரண்டு மடங்காக அதிகரிக்கும் வகையில் 60 ஆண்டுகள் பழமையான இந்த சட்டத்தை திருத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உள்துறை அமைச்சகம் ஒரு வரைவு ஆயுத சட்ட திருத்தத்தை தயாரித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

கள்ளத்துப்பாக்கிகள், துப்பாக்கிகள் தயாரிக்கும் இடத்தில் இருந்து அதனை பயன்படுத்துவோருக்கு செல்வது வரை கண்காணிப்பது, பிரபலங்கள் துப்பாக்கிசூடு நடத்துவது உள்பட பல்வேறு பிரிவுகளில் திருத்தம் செய்யப்படுகிறது.

தற்போது ஒரு நபருக்கு 3 துப்பாக்கிகள் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இது 2 துப்பாக்கிகளாக குறைக்கப்படும். சட்டம் நிறைவேற்றப்பட்டால் 3-வது துப்பாக்கியை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் தேசிய, சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்க மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டும் இந்த போட்டிக்காக 3 துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

கூட்டாக இயங்கும் குற்றவாளி குழுக்களில் உள்ள ஒருவர் கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தினால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் வாழ்நாள் முழுவதும் (சாகும் வரை) சிறை தண்டனை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட துப்பாக்கிகள் கள்ளத்தனமாக தயாரித்தல், விற்பனை செய்தல், பழுதுபார்த்தல், வைத்திருத்தல் ஆகியவற்றுக்கு குறைந்தபட்சம் 14 வருடங்கள் சிறை தண்டனையும், அதிகபட்சம் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

கள்ளத்தனமாக துப்பாக்கிகளை இறக்குமதி செய்வது, விற்பது, வாங்குவது ஆகியவற்றுக்கான சட்டப்பிரிவும் திருத்தப்படுகிறது. அங்கீகாரம் பெற்ற துப்பாக்கி வினியோகஸ்தர் துப்பாக்கியில் தயாரிப்பு முத்திரையை அழித்தால் 7 வருடங்கள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டதிருத்தம் தொடர்பாக பல்வேறு மாநில உள்துறை செயலாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோருடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தியிருப்பதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த சட்டதிருத்தத்தை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய முயற்சி செய்வோம், முடியவில்லை என்றால் அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.


Next Story