காஷ்மீரில் ஊடுருவ பாகிஸ்தான் எல்லையோர முகாம்களில் 500 பயங்கரவாதிகள் காத்திருப்பு - வடக்கு பிராந்திய ராணுவ தளபதி தகவல்


காஷ்மீரில் ஊடுருவ பாகிஸ்தான் எல்லையோர முகாம்களில் 500 பயங்கரவாதிகள் காத்திருப்பு - வடக்கு பிராந்திய ராணுவ தளபதி தகவல்
x
தினத்தந்தி 11 Oct 2019 11:15 PM GMT (Updated: 11 Oct 2019 10:16 PM GMT)

காஷ்மீரில் ஊடுருவ பாகிஸ்தான் எல்லையோர முகாம்களில் 500 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக, வடக்கு பிராந்திய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

ஜம்மு,

காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்காக பாகிஸ்தான் எல்லையோர முகாம்களில் சுமார் 500 பயங்கரவாதிகள் காத்திருப்பதாகவும், காஷ்மீர் மாநிலத்துக்குள்ளேயும் சுமார் 300 பயங்கரவாதிகள் இயங்கி வருவதாகவும் வடக்கு பிராந்திய ராணுவ தளபதி ரன்பிர் சிங் கூறினார்.

பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் அடிக்கடி ஊடுருவி அங்கு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊடுருவலை தடுப்பதற்காக எல்லையில் இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் வடக்கு பிராந்திய ராணுவ தளபதி ரன்பிர் சிங் நேற்று ஜம்முவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காஷ்மீருக்கு உள்ளேயும், வெளியேயும் பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது:-

தற்போதைய நிலையில் காஷ்மீருக்குள் சுமார் 200 முதல் 300 வரையிலான பயங்கரவாதிகள் உள்ளனர். பாகிஸ்தான் ஆதரவுடன் இந்த பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்காக அவர்கள் இயங்கி வருகின்றனர்.

அதைப்போல இந்தியாவுக்குள் நுழைவதற்காக, பாகிஸ்தான் எல்லையில் அதாவது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இயங்கி வரும் பயங்கரவாத முகாம்களில் சுமார் 500 பயங்கரவாதிகள் தகுந்த வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் பயிற்சி அட்டவணையை பொறுத்து இந்த எண்ணிக்கை மாறுபடலாம்.

ஆனால் எந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்களை தடுத்து அழித்து எல்லையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு நாங்கள் திறமையுடனும், தயாராகவும் இருக்கிறோம். இதைப்போல காஷ்மீரில் அமைதியும், இயல்பு நிலையும் நீடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே எங்கள் பணியாகவும் இருந்து வருகிறது. இவ்வாறு ரன்பிர் சிங் கூறினார்.

Next Story