உன்னாவ் பாலியல் சம்பவம்: கொலை குற்றச்சாட்டில் இருந்து குல்தீப் சிங் செங்கர் விடுவிப்பு


உன்னாவ் பாலியல் சம்பவம்: கொலை குற்றச்சாட்டில் இருந்து குல்தீப் சிங் செங்கர் விடுவிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2019 2:18 AM GMT (Updated: 12 Oct 2019 2:18 AM GMT)

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உன்னாவ் பாலியல் வழக்கில், சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் சிறுமி ஒருவர் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.  இதையடுத்து, செங்கா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

 இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்காக, கடந்த ஜூலை 28-ஆம் தேதி, ரேபரேலி மாவட்டத்தில் அந்தப் பெண் தனது வழக்கறிஞர், உறவினா்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவா்களின் காா் மீது லாரி ஒன்று  மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்தப் பெண்ணும், அவரது வழக்கறிஞரும் பலத்த காயமடைந்தனா். உடன் வந்த உறவினா் இருவா் உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து அந்தப் பெண்ணின் உறவினா் அளித்த புகாரின்பேரில் உத்தரப் பிரதேச காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதனிடையே, இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியதால், இதுகுறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, குல்தீப் சிங் செங்கா் உள்ளிட்டோா் மீது கொலை, கொலை முயற்சி, குற்றச்சதி உள்ளிட்ட இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்நிலையில், சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை  சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  தாக்கல் செய்தது. அதில், செங்கா், அவரது கூட்டாளிகள்  மீது குற்றச்சதி மற்றும் மிரட்டுதல் உள்ளிட்ட   குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளது.  ஆனால், கொலை முயற்சி குற்றச்சாட்டில் இருந்து செங்கர் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் ஆசிஷ் குமாா் பாலின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. விபத்து நேரிட்டதில் குற்றச்சதி ஏதுமில்லை என்று சிபிஐயின் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story