கர்நாடக முன்னாள் துணை முதல் மந்திரியின் உதவியாளர் திடீர் தற்கொலை
கர்நாடக முன்னாள் துணை முதல் மந்திரியின் உதவியாளர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தின. ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல்-மந்திரியாகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாகவும் இருந்தனர். கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பிறகு பா.ஜனதா ஆட்சி அமைத்தது. பா.ஜனதாவின் மூத்ததலைவரான எடியூரப்பா முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார்.
இதன் தொடர்ச்சியாக ஏற்கனவே நடந்த வருமான வரி சோதனை தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே. சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான பரமேஸ்வர், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.எல்.ஜாலப்பா ஆகியோரின் வீடு, அலுவலகங்கள், மருத்துவ கல்லூரிகள், பிற கல்லூரிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடு-அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக முன்னாள் துணை முதல் மந்திரி பரமேஷ்வராவின் உதவியாளர் ரமேஷ் இன்று காலை இந்திய விளையாட்டு கழகம் அருகே உள்ள மரமொன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
கர்நாடகாவின் ராமநகரில் உள்ள மெல்லெஹள்ளி என்ற இடத்தில் வசித்து வந்தவரான ரமேஷ், காங்கிரஸ் கட்சியில் தட்டச்சு ஊழியராக தனது பணியை தொடங்கி பின்பு பரமேஷ்வராவின் உதவியாளரானார்.
அவர் தற்கொலை பற்றி பரமேஷ்வரா கூறும்பொழுது, ரமேஷிடம் சூழ்நிலையை எதிர்கொள்ள தைரியமுடன் இருக்கும்படி கூறினேன். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என எனக்கு தெரியாது.
இன்று காலை அவரிடம் பேசும்பொழுது கூட தைரியமுடன் இருக்கும்படியே கூறினேன் என்று தெரிவித்து உள்ளார். இதன்பின்பு ரமேஷ் தற்கொலை செய்து கொண்ட பகுதிக்கு பரமேஷ்வரா சென்றார். அதேவேளையில், வருகிற செவ்வாய் கிழமை நேரில் ஆஜராக பரமேஷ்வராவுக்கு வருமானவரி துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். அதனால் வருமானவரி துறை அலுவலகத்தில் அன்று ஆஜராவேன் என செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story