மத்திய பிரதேசம்: கார் விபத்தில் தேசிய அளவிலான ஹாக்கி வீரர்கள் 4 பேர் பலி
மத்திய பிரதேசத்தில் கார் விபத்தில் தேசிய அளவிலான ஹாக்கி வீரர்கள் 4 பேர் பலியாகி உள்ளனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்திற்கு அருகே ரைசால்பூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த காரில் பயணம் செய்து கொண்டிருந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான நான்கு பேரும் தேசிய அளவிலான ஹாக்கி விளையாட்டு வீரர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்கள் அனைவரும் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் நடைபெறும் ‘தியான் சந்திரா டிராபி’ ஹாக்கி போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலியான நான்கு பேரும் 18 முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்களாவர். இவர்கள் அனைவரும் மத்திய பிரதேச ஹாக்கி அகாடமி உறுப்பினர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story