பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கிதான் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு


பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கிதான் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Oct 2019 12:09 PM GMT (Updated: 14 Oct 2019 9:05 PM GMT)

பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கியாக மோடி திகழ்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

சண்டிகார்,

பா.ஜனதா ஆளும் அரியானா மாநிலத்தில் 21-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநிலத்தில் நேற்று தனது முதலாவது பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

நுஹ் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

அம்பானி, அதானி போன்ற பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கியாக திகழ்பவர் பிரதமர் மோடி. நாள் முழுவதும் அவர்களுக்காகவே அவர் பேசி வருகிறார்.

அவரை எப்போதும் டிரம்ப், அம்பானி போன்றவர்களுடன்தான் பார்க்க முடியும். விவசாயிகளுடன் பார்க்க முடியாது.

நரேந்திர மோடி, ஏழைகளின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அதை தனது 15 பணக்கார நண்பர்களின் பாக்கெட்டில் போடுகிறார்.

பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட வேண்டுமானால், ஏழைகளின் பாக்கெட்டில்தான் பணத்தை போட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரசால் அறிவிக்கப்பட்ட ‘நியாய்‘ திட்டம், அதையே இலக்காக கொண்டது.

மோடி தன்னை உண்மையான தேசியவாதியாக கூறிக்கொண்டால், எதற்காக பொதுத்துறை நிறுவனங்களை பணக்கார நண்பர்களுக்கு விற்கிறார்?

பா.ஜனதாவும், ஆர்.எஸ். எஸ்.சும் சாதி, மதம், பிராந்தியம் அடிப்படையில் வெள்ளைக்காரர்களைப் போல் நாட்டை பிளவுபடுத்துகின்றன. ஆனால், காங்கிரஸ் மக்களை ஒன்றுபடுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


Next Story