வாகனங்களுக்கான ஆதார் போன்றது பாஸ்டேக் -மத்திய அமைச்சர் நிதின் கட்காரி


வாகனங்களுக்கான ஆதார் போன்றது பாஸ்டேக் -மத்திய அமைச்சர் நிதின் கட்காரி
x
தினத்தந்தி 15 Oct 2019 6:40 AM GMT (Updated: 15 Oct 2019 6:40 AM GMT)

வாகனங்களை ட்ராக் செய்யும் ஆதார் போன்று பாஸ்டேக் செயல்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

புதுடெல்லி,

சுங்கச்சாவடிகள் கட்டணம் மட்டுமல்லாது எரிபொருள் கட்டணம், பார்க்கிங் கட்டணங்கள் போன்ற வாகன தொடர்பான கட்டணங்களை செலுத்துவதற்கும் பாஸ்டேக் முறையை பயன்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

”ஒரே நாடு ஒரு டேக்- பாஸ்டேக்” மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிதின் கட்காரி கூறியதாவது:- “ பாஸ்டேக்  வாகனங்களுக்கான ஆதார் என்ற நிலையில் உள்ளது. இதன் தரவுகள் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களை ட்ராக் செய்யவும் பல்வேறு விசாரணை முகமைகளால் பயன்படுத்தப்படும்.

வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் சுங்கச் சாவடி கட்டணம் முழுமையாக மின்னணு முறைக்கு மாறிவிடும். இது மிகவும் முக்கியமான நடவடிக்கை. இதன் மூலம் சுங்கச்சாவடி கட்டண வசூலில் இருந்த பிரச்சினைகள் முழுமையாக நீங்கிவிடும். இதனால், அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச் சாவடி மூலம் கிடைக்கும் கட்டண வருவாய் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு அதிகரிக்கும். இப்போது ஆண்டுக்கு ரூ.30,000 கோடி அளவுக்கு சுங்கச் சாவடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டண வசூல் அதிகரிக்கும்போது, மேலும் பல தரமான சாலைகளை அமைக்க முடியும் ” என்றார்.

Next Story