இந்திய விவசாயிகளுக்கு சொந்தமான நீர் இனி பாகிஸ்தானுக்கு செல்லாது - பிரதமர் மோடி சூசகம்


இந்திய விவசாயிகளுக்கு சொந்தமான நீர் இனி பாகிஸ்தானுக்கு செல்லாது  - பிரதமர் மோடி சூசகம்
x
தினத்தந்தி 15 Oct 2019 7:22 PM IST (Updated: 15 Oct 2019 7:22 PM IST)
t-max-icont-min-icon

இந்திய விவசாயிகளுக்கு சொந்தமான நீர் இனி பாகிஸ்தான் பக்கம் செல்லவிடாமல் தடுப்போம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சண்டிகர்,

அரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி தேர்தலும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பாஜக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்தநிலையில், அரியானாவில் உள்ள சார்கி தாத்ரி எனும் இடத்தில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.  அப்போது அவர் பேசியதாவது:

அரியானா மாநில மக்களின் அன்பு தம்மை ஈர்த்து உள்ளது.  இந்த ஆண்டில் அரியானா மாநிலத்தில் இரண்டு தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. ஒன்று மண் விளக்குகளில் தீபம் ஏற்றுவது மற்றொரு தேர்தலில் பா.ஜ.க பெறும் வெற்றியை கொண்டாடுவது. 

நம்முடைய தீபாவளியை நமது வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அர்ப்பணித்து அவர்களின் சாதனைகளைப் போற்ற வேண்டும்.

கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவுக்குச் சொந்தமான நீர் அரியானா விவசாயிகளுக்குச் சொந்தமான நீர் பாகிஸ்தானில் பாய்கிறது. இந்த நீரை  தடுத்து நிறுத்தி உங்களுடைய நிலங்களுக்கும், வீடுகளுக்கும் கொண்டு வரப்படும்.

பாகிஸ்தானில் பாயும் நீரைப் பெறுவதற்கு அரியானா, ராஜஸ்தான் மாநில மக்களுக்கு அதிக உரிமை உள்ளது. இந்த நீரை இதற்கு முன் ஆட்சி செய்த அரசுகள் தடுத்திருக்க வேண்டும். ஆனால் இனிமேல் உங்கள் போராட்டத்தில் உங்களுக்காக மோடியாகிய நான் போரிடுவேன்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 70 ஆண்டுகளாக நீடித்து வந்த பயங்கரவாதத்தை 370 பிரிவை நீக்கிய தன் மூலம் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறோம்.

இந்த முடிவை நாட்டில் உள்ள அனைவரும் பாராட்டுகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்கள், மக்களிடமும், உலக நாடுகளிடமும் பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.

எதிர்க்கட்சிகளிடம் கேட்கிறேன் உங்களுக்கு துணிச்சல் இருந்தால் மீண்டும் அரசியலமைப்பு 370-ம் பிரிவை திரும்பக் கொண்டுவர முடியுமா? 

அரியானாவுக்கு மீண்டும் சேவை செய்ய பாஜக முடிவு செய்துவி்ட்டது. மக்களும் எங்களுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்து விட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சிந்து மற்றும் 5 துணை ஆற்று நீரை பகிர்ந்து கொள்ள இந்தியாவும், பாகிஸ்தானும் 1960 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன்படி பியாஸ், சட்லெஜ், ராவி ஆகிய மூன்று ஆற்று நீரை இந்தியாவும், சிந்து, ஜீலம், ஜீனாப் ஆகிய ஆறுகளின் நீரை பாகிஸ்தானும் பயன்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதில் இந்திய ஆறுகளில் உள்ள தண்ணீரை காஷ்மீர், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு மூன்று திட்டங்களின் மூலம் கொண்டு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story