நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டால் திணறும் தலைநகர் டெல்லி!
டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் காற்று மாசு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. குளிர்காலம் தொடங்க உள்ள நிலையில், டெல்லியை சுற்றியுள்ள ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள், விளைச்சலுக்கு பின்னர் வயல்வெளிகளில் உள்ள வைக்கோல் உள்ளிட்டவைகளை தீ வைத்து கொளுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் டெல்லியைச் சுற்றிலும் காற்று மாசுபடத் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பான நாசாவின் செயற்கைக்கோள் புகைப்படத்தை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது.
வேளாண் கழிவுப் புகையால், டெல்லியில் சுவாசிக்கும் காற்றின் தரமானது மோசம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக துவாரகா பகுதியில் காற்றின் தரமானது 480 என மிகவும் மோசமான புள்ளி அளவில் உள்ளது. துவாரகாவைத் தொடர்ந்து ரோகினி, நேரு நகர், சிரிஃபோர்ட் ஆகிய இடங்களில் காற்றின் தரமானது மிக மோசமாக உள்ளது.
டெல்லியில் ஒட்டு மொத்த காற்றின் தரம் நேற்று மாலை 6.30 நிலவரப்படி, 275 ஆக இருந்தது. காசியாபாத், கிரேட்டர் நொய்டா, உள்ளிட்ட இடங்களில் 300 புள்ளிகளை தாண்டியுள்ளது. காற்றில் 0 முதல் 50 புள்ளிகள் நல்ல நிலை என்றும், 51 முதல் 100 வரை திருப்தியளிக்க கூடியது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. 101 முதல் 200 வரை மிதமானது எனவும் 201 முதல் 300 வரை மோசம், 301 முதல் 400 வரை மிக மோசம், 400 முதல் 500 வரை தீவிரமானது என்று வரையறுக்கப்படுகிறது.
Related Tags :
Next Story