ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தை 24-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி; தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவு


ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தை 24-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி; தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவு
x
தினத்தந்தி 17 Oct 2019 11:05 PM GMT (Updated: 17 Oct 2019 11:05 PM GMT)

ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை வருகிற 24-ந் தேதி வரை 14 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க தனிக்கோர்ட்டு நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

புதுடெல்லி, 

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி சி.பி.ஐ. கைது செய்து, தங்கள் காவலில் வைத்து விசாரித்து வந்தது. பின்னர் அவருடைய காவல் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 5-ந் தேதி அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, ப.சிதம்பரத்தை 14 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தனிக்கோர்ட்டு நீதிபதி அஜய்குமார் குஹர், திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தவும், தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் அனுமதி அளித்து கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து அமலாக்கத்துறையின் 3 அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்திடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலத்தையும் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததால், நேற்று மாலை 4 மணி அளவில் அவர் தனிக்கோர்ட்டில் நீதிபதி அஜய்குமார் குஹர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணை தொடங்கியதும் சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், இந்த வழக்கில் இதுவரை ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்றும், அவருடைய நீதிமன்ற காவல் இன்று (நேற்று) முடிவடைந்ததால் அவருக்கு நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதி, அமலாக்கத்துறை அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரும் மனுவும் அடுத்து விசாரிக்கப்பட இருப்பதால் இது தொடர்பான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ப.சிதம்பரம் தரப்பில் ஆஜராகும் மூத்த வக்கீல்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனுசிங்வி ஆகியோர் வேறு ஒரு வழக்கில் இருந்ததால் கோர்ட்டுக்கு வருவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் கோர்ட்டுக்கு வந்ததும் மீண்டும் விசாரணை தொடர்ந்தது.

அப்போது அமலாக்கத்துறையின் சார்பில் துஷார் மேத்தா வாதாடுகையில் கூறியதாவது:-

“ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரும் மனுவை நாங்கள் தாக்கல் செய்து இருக்கிறோம். இந்த மனுவை நாங்கள் முன்பு தாக்கல் செய்த போது அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்ததாக கோர்ட்டு தெரிவித்தது. அவரை காவலில் எடுத்து விசாரிப்பதன் அவசியத்தை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்து உள்ளது. அவரை அமலாக்கத்துறையின் காவலில் எடுத்து விசாரிக்க நாங்கள் இயந்திரத்தனமாக கோரிக்கை விடுக்கவில்லை. சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு எதிராக அமலாக்கத்துறையிடம் தனியாக சில ஆவணங்கள் உள்ளன. எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரை தொடர்ந்து ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் வாதாடுகையில், “கடந்த செப்டம்பர் 5-ந் தேதி வரை இவர்களுக்கு அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் தேவை ஏற்படவில்லை. இப்போது திடீரென்று வந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கூறுவதை நாங்கள் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். அவர் தானாக சரண் அடைய முன்வந்த போது அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்தது. எனவே அமலாக்கத்துறையின் இந்த மனுவை நிராகரிக்க வேண்டும்” என்றார்.

இந்த நிலையில் அமலாக்கத்துறையின் மனு மீது நீதிபதி முடிவு எடுக்கும் முன்பே, சி.பி.ஐ. ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்திய அதே சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் உள்ள இடத்திலோ அல்லது அதே போன்ற வேறொரு இடத்திலோ விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவருக்கு போதிய பாதுகாப்பு, வீட்டு உணவு, மேற்கத்திய கழிப்பறை வசதி, மருந்துகள், மூக்கு கண்ணாடி மற்றும் குடும்பத்தினர் அவரை சந்திக்க அனுமதி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.

அவருக்கு மேற்கண்ட வசதிகளை வழங்க தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று துஷார் மேத்தா கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய்குமார் குஹர், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை வருகிற 24-ந் தேதி வரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் இதே விவகாரத்தில் சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் அவருடைய நீதிமன்ற காவலை வருகிற 24-ந் தேதி வரை நீட்டித்தும் உத்தரவு பிறப்பித்தார்.

தனிக்கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் ப.சிதம்பரத்தை தங்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே ப.சிதம்பரத்திடம் முன்பு கூடுதல் தனிச்செயலாளராக இருந்த கே.வி.கே.பெருமாளிடம் கடந்த மாதம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். அமலாக்கத்துறையும் இவரிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து நேற்று அவர் 5-வது முறையாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். 

Next Story