மராட்டியத்தில் 21-ந் தேதி தேர்தல்: ஆதிக்கம் செலுத்துவாரா, ஆதித்ய தாக்கரே?
மராட்டியத்தில் 21-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஆதித்ய தாக்கரே ஆதிக்கம் செலுத்துவாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
ஆதித்ய தாக்கரே! - மராட்டிய மாநில தேர்தல் அரசியலில் சிங்கக்குட்டியாக புறப்பட்டிருக்கிறார், இந்த இளம் தலைவர்.
1966-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந் தேதி பால் தாக்கரேயால் தொடங்கப்பட்ட காலம் தொட்டு, இன்று வரை மராட்டிய அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக சிவசேனா இருந்து வருகிறது.
‘மண்ணின் மைந்தர்’ என்ற கொள்கைதான், இன்னும் சிவசேனாவின் பலமாக இருக்கிறது. அந்த கட்சியை தூக்கிப்பிடித்துக்கொண்டிருப்பதும் அந்த கொள்கைதான்.
என்ன, 53 ஆண்டு கால சிவசேனாவின் அரசியல் பயணத்தில் இதுவரை பால் தாக்கரே குடும்பத்தினர் யாருமே தேர்தல் அரசியலில் களம் இறங்கியது இல்லை. எந்த ஆட்சிப்பதவியிலும் அமர்ந்தது இல்லை.
மனோகர் ஜோஷியையும், அவரை தொடர்ந்து நாராயண் ரானேயையும் மராட்டிய மாநில முதல்-மந்திரி நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்த கட்சி, சிவசேனா.
மனோகர் ஜோஷியை நாடாளுமன்ற சபாநாயகர் பதவியிலும் அமர வைத்தது, சிவசேனா.
மனோகர் ஜோஷி, ஆனந்த்ராவ் விதோபா அத்சுல், சுரேஷ் பிரபு, ஆனந்த் கீதே, அரவிந்த் சவந்த் ஆகியோரை மத்திய மந்திரி பதவியில் அமர வைத்தும் அழகு பார்த்திருக்கிறது சிவசேனா.
ஆனால் பால் தாக்கரேயும் சரி, அவரது மகன் உத்தவ் தாக்கரேயும் சரி தேர்தலில் போட்டியிட விரும்பியது இல்லை. இப்போதுதான் முதன்முதலாக மூன்றாம் தலைமுறை தலைவராக, சிவசேனாவின் இளைஞர் அணியாக திகழ்கிற யுவசேனாவின் தலைவராக இருக்கிற ஆதித்ய தாக்கரே மராட்டிய சட்டசபை தேர்தலில் களம் இறங்கி இருக்கிறார்.
அவர் முதன்முதலாக களம் காண்கிற மும்பை வொர்லி தொகுதி, அவரால் பரபரப்பாகி இருக்கிறது.
29 வயதான ஆதித்ய தாக்கரே சட்ட பட்டதாரி. 2010-ம் ஆண்டு அவர் சிவசேனாவில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
அவர், அரசியல்வாதி மட்டுமல்ல ஒரு கவிஞர், பாடலாசிரியர் என்பது அவரது சிறப்பு தகுதிகள். அவர் தனது 17-வது வயதிலேயே ‘மை தாட்ஸ் இன் ஒயிட் அண்ட் பிளாக்’ (‘கருப்பு, வெள்ளையில் எனது எண்ணங்கள்’) என்ற கவிதை தொகுப்பை எழுதி வெளியிட்டிருக்கிறார். அதற்கு அடுத்த ஆண்டே ஒரு ஆல்பமும் வெளியிட்டிருக்கிறார்.
பாரதீய ஜனதா கட்சியும், சிவசேனாவும் கடந்த தேர்தலில் தனித்தனியேதான் போட்டியிட்டன. தேர்தலுக்கு பின்னர்தான் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. இந்த சட்டசபை தேர்தலிலும் அந்த நிலைதான் ஏற்படுமா என கேள்வி எழுந்தது.
ஒரு வழியாய் இரு கட்சிகளும் பேசி தொகுதி பங்கீடு இணக்கமாக நடந்து முடிந்திருக்கிறது. 288 இடங்களை கொண்ட மராட்டிய சட்டசபையில், பாரதீய ஜனதா கட்சி 164 இடங்களிலும், சிவசேனா 124 இடங்களிலும் போட்டி போடுகின்றன.
ஆர்ப்பாட்டமாக வேட்பு மனு தாக்கல் செய்து, அதிரடியாக பிரசாரத்தில் இறங்கி இருக்கிறார் ஆதித்ய தாக்கரே. அவர் போகிற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் கடலென திரள்வதாக சிவசேனா தொண்டர்கள் நெஞ்சு நிமிர்த்துகிறார்கள். ரோடு ஷோ, பேரணி, பொதுக்கூட்டம் என அவர் பட்டையை கிளப்பிக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
வொர்லி தொகுதியை காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசுக்கு ஒதுக்க, அந்த கட்சியோ பகுஜன் குடியரசு சோசலிச தலைவர் சுரேஷ் மானேயை ஆதித்ய தாக்கரேவுக்கு எதிராக நிறுத்தி இருக்கிறது.
ஆதித்ய தாக்கரேயின் வெற்றியில் பிரச்சினை இருக்காது, எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் என்பதில்தான் கணக்கு போட்டுக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.
ஆதித்ய தாக்கரே, தேர்தல் அரசியலில் களம் இறங்கியதின் அடிப்படை நோக்கம், மராட்டியத்தின் முதல்-மந்திரி நாற்காலியை கைப்பற்றுவதுதான்.
கடந்த முறை பாரதீய ஜனதா கட்சி தனித்து போட்டியிட்டு 122 இடங்களிலும், சிவசேனா 63 இடங்களிலும் வெற்றி பெற்றன. நாடாளுமன்ற தேர்தலில், இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு பாரதீய ஜனதா கட்சி 23 தொகுதிகளிலும், சிவசேனா 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்தை, அதுவும் 300-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றிய உற்சாகத்தில், பாரதீய ஜனதா கட்சி மறுபடியும் தேவேந்திர பட்னாவிஸ்சைத்தான் முதல்-மந்திரியாக்குவதில் தீவிரமாக இருக்கிறது. அதிலும் இந்த முறை தனித்தே ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று துடிக்கிறது, அந்தக் கட்சி.
ஆனால் சிவசேனாவும் அசைந்து கொடுப்பதாக இல்லை; ஆதித்ய தாக்கரேயை முதல்-மந்திரி ஆக்க கனவு வளர்க்கிறது. யார் அதிக இடங்களை கைப்பற்றப்போகிறார்கள் என்பதை வைத்து முதல்-மந்திரி நாற்காலி யாருக்கு என்று தீர்மானிக்கப்படலாம்.
கூட்டணி ஆட்சி அமைகிற நிலை உருவானால், பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தமட்டில் ஆதித்ய தாக்கரேவுக்கு துணை முதல்-மந்திரி பதவியைத் தர திறந்த மனதாக இருக்கிறது. அதை ஏற்கிற மன நிலையில் சிவசேனா இருக்கிறதா என்றெல்லாம் இப்போதே உறுதிபட கூற முடியாது.
மராட்டியத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பது மராத்தா இன ஓட்டு வங்கி என்று சொன்னால் அது மறுக்க முடியாத உண்மை. அந்த மாநிலத்தின் முதல் முதல்-மந்திரி ஒய்.பி. சவான்கூட மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்தான். வசந்த் தாதா பாட்டீல், எஸ்.பி. சவான், சரத் பவார், நாராயண் ரானே, அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான் என பல முதல்-மந்திரிகளை தந்த இனம் அது.
சிவசேனாவின் பலம் மராத்தா சமூகத்தினர்தான். காங்கிரஸ் கட்சியில் இருந்து மராத்தா சமூகத்தினரை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறது சிவசேனா. மற்ற சமூகத்தினரின் ஆதரவை எந்தளவுக்கு சிவசேனா பெறப்போகிறது என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பாரதீய ஜனதா கட்சியும், சிவசேனாவும் தாங்களே முதல்-மந்திரி நாற்காலியை கைப்பற்ற வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிற வேளையில் அந்த அணியை சமாளிக்கிற நிலையிலாவது காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இருக்கிறதா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
அக்டோபர் 21-ந் தேதி மராட்டிய மக்கள் தீர்ப்பு எழுதப்போகிறார்கள். தீர்ப்பு வெளியாகிற நாள் 24-ந் தேதி. அன்று தெரிந்து விடும் ஆதித்ய தாக்கரேயின் ஆதிக்கம்.
Related Tags :
Next Story