தெலுங்கானாவில் 15 வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்


தெலுங்கானாவில் 15 வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 19 Oct 2019 12:01 PM GMT (Updated: 19 Oct 2019 12:01 PM GMT)

தெலுங்கானாவில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் 15 வது நாளாக இன்று நீடித்து வருகிறது.

ஹைதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 5 ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகத்தை அரசு துறையாக மாற்ற வேண்டும், போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 26 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காலக்கெடு விதித்தார். அந்த காலக்கெடுவுக்குள் பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

மாநிலம் முழுவது தற்காலிக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த வாரம் 2 போக்குவரத்து ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து போராட்டம் தீவிரமடைந்தது. இதுவரை போக்குவரத்து ஊழியர்களுடன் முதல்வர் சந்திரசேகர ராவ் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

அதனை தொடர்ந்து இன்று மாநிலம் தழுவிய போராட்டத்திறகு போக்குவரத்து ஊழியர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. தனியார் போக்குவரத்து ஊழியர்கள், லாரி, ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஊழியர்கள் அனைவரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இன்று காலை 5 மணிக்கு தொடங்கிய இந்த வேலைநிறுத்தம் 12 மணி நேரம் நீடித்தது. மாநிலம் முழுவதும் சுமார் 50,000 வாகனங்கள் இன்று ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர்.

போக்குவரத்து ஊழியர்களின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம் கட்சி, ஜன சேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

Next Story