ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை - டெல்லி அலுவலகத்தில் தி.மு.க. மனு


ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை - டெல்லி அலுவலகத்தில் தி.மு.க. மனு
x
தினத்தந்தி 20 Oct 2019 4:30 AM IST (Updated: 20 Oct 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில், சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என டெல்லி அலுவலகத்தில் தி.மு.க. மனு அளித்துள்ளது.

புதுடெல்லி,

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இவர் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த ஆவணங்களில் ஜெயலலிதாவின் கைரேகை முறைகேடாக பதிவு செய்யப்பட்டது எனவும், எனவே அவரது வெற்றி செல்லாது எனவும் அறிவிக்கக்கோரி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றி செல்லாது என்று கடந்த மார்ச் 22-ந் தேதி தீர்ப்பளித்தது. இதற்கிடையே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி ஏ.கே.போஸ் காலமானதால், கடந்த நாடாளுமன்ற தேர்தலுடன் இணைத்து திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு ஜெயலலிதாவின் கைரேகையை முறைகேடாக பெற்ற விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. புகார் அளித்தார்.

அந்த மனுவில், ‘2016-ம் ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் கைரேகை முறைகேடாக பெறப்பட்டு உள்ளது. எனவே இந்த கைரேகையை அங்கீகரித்த அப்போதைய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவ ராவ், ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்த சசிகலா, அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story