வருமான வரி சோதனை எதிரொலி: கல்கி பகவான் மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்?


வருமான வரி சோதனை எதிரொலி:  கல்கி பகவான் மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்?
x
தினத்தந்தி 20 Oct 2019 11:04 AM GMT (Updated: 20 Oct 2019 11:04 AM GMT)

வருமான வரி சோதனை எதிரொலியாக கல்கி பகவான் மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜயவாடா, 

ஆந்திராவை  தலைமையிடமாக கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. விஜயகுமார் என்பவர் தன்னை கல்கி பகவான் என்று அறிவித்து கொண்டு ஆசிரமங்களை தொடங்கினார்.

ஆசிரமங்களுக்கு சென்னை, ஆந்திரா, கர்நாடகா என நாடு முழுவதும், வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. இங்கு காணிக்கை, சிறப்பு பூஜை என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதே போல் கல்கி விஜயகுமாரின் மகன் பல தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கல்கி ஆசிரமங்களில் அதிகளவு வரி ஏய்ப்பு செய்யப் பட்டுள்ளதாக வருமானவரி துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 16-ந்தேதி சென்னை, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் உள்ள கல்கி ஆசிரமங்கள் உள்பட 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

4-வது நாளாக நேற்றும் கல்கி ஆசிரமத்தில் தொடர்ந்து சோதனை நடத்தினர். இதில் ரூ.43 கோடியே 90 லட்சம் பணம், ரூ.18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர், 88 கிலோ தங்க கட்டிகள், நகைகள், ரூ.5 கோடி மதிப்புள்ள வைரகற்கள் மேலும் கணக்கில் வராத ரூ-500 கோடிக்கு மேல் பணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கல்கி பகவான் குழுமம் சார்பில் இந்தியாவை தவிர வெளிநாடுகளில் உள்ள கம்பெனிகளில்  பெரிய  அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கல்கி பகவான் விஜயகுமார் ஆந்திர மாநிலம் வரதய்ய பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் வசிப்பதாக கூறப்படுகிறது. சோதனையின் போது அவர் அங்கு இல்லை. ஆசிரமத்தில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆசிரம நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது . ரூ.500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதால் கல்கி பகவான் விஜயகுமாரிடம் விசாரணை நடத்த வருமான வரி துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால் கல்கி விஜயகுமார் எங்கு இருக்கிறார் என்பது ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை. அவரை பார்த்து 2 ஆண்டுகள் ஆனதாக ஆசிரம நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து கல்கி விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளி நாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது பாஸ் போர்ட்டை வருமான வரித்துறையினர் தீவிரமாக தேடினர். ஆனால் அது கிடைக்கவில்லை. இதனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று அதிகாரிகள்  கருதுகிறார்கள். இதையடுத்து வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றலாமா என்று வருமானவரி துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

Next Story