அரியானா மற்றும் மராட்டியத்தில் காலை 9 மணி நிலவரப்படி 8.73% மற்றும் 5.46% வாக்குப்பதிவு


அரியானா மற்றும் மராட்டியத்தில் காலை 9 மணி நிலவரப்படி   8.73% மற்றும் 5.46% வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 21 Oct 2019 5:15 AM GMT (Updated: 21 Oct 2019 5:15 AM GMT)

அரியானா மற்றும் மராட்டியத்தில் காலை 9 மணி நிலவரப்படி 8.73% மற்றும் 5.46% வாக்குப்பதிவாகி உள்ளது.

மும்பை,

மராட்டியம், அரியானா மாநில சட்டசபை தேர்தல்களுக்கு இன்று காலை  முதல்  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் மராட்டிய மாநில சட்டசபைக்கும், பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் அரியானா சட்டசபைக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாக போட்டியிடுகின்றன.

90 உறுப்பினர்களை கொண்ட அரியானாவில், ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஜனநாயக் ஜனதா ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மராட்டியம், அரியானா மாநிலங்களின் சட்டசபை தேர்தலுடன் நாடு முழுவதும் தமிழ்நாடு (2), உத்தரபிரதேசம் (11), குஜராத் (6), கேரளா (5), பீகார் (5), அசாம் (4), பஞ்சாப் (4), சிக்கிம் (3), ராஜஸ்தான் (2), இமாசலபிரதேசம் (2), புதுச்சேரி, தெலுங்கானா, மத்தியபிரதேசம், மேகாலயா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சத்தீஷ்கார் (தலா ஒரு தொகுதி) ஆகிய மாநிலங்களில் உள்ள 51 சட்டசபை தொகுதிகளுக்கும், மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா நாடாளுமன்ற தொகுதிக்கும், பீகார் மாநிலம் சமஸ்திபூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் 24ந்தேதி எண்ணப்படும்.

இந்த நிலையில், மராட்டியம் மற்றும் அரியானாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணியளவில் தொடங்கியது.  இதற்காக காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர்.

மும்பை  பாண்ட்ரா (மேற்கு) வாக்குச் சாவடியில்  நடிகர் அமீர்கான்  வாக்களித்தார். அவர் வாக்களித்துவிட்டு கூறும் போது , 'மராட்டியத்தின் அனைத்து குடிமக்களும் வந்து அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என கூறினார். இதுபோல் முன்னாள் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி தனது  மனைவி நடிகை லாரா தத்தாவுடன் வந்து வாக்களித்தார்.

அரியானா மற்றும் மராட்டியத்தில்  காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு  8.73 சதவீதம் மற்றும் 5.46 சதவீதமாக இருந்தது.

இதுபோல் கேரளாவில் நடைபெறும் 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இன்று  7 மணிக்கு தொடங்கியது. கேரள மாநிலம் அரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7 மணிக்கு தொடங்கியது. பலத்த மழை காரணமாக வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. அரூரில் காலை 8 மணியளவில் 4.94% வாக்கு பதிவாகி இருந்தது. இதற்கிடையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஆறு சாவடிகளில் வாக்குப்பதிவு சற்று நேரம் நிறுத்தப்பட்டது. 

எர்ணாகுளம் சட்டமன்றத் தொகுதியில் வெலிங்டன் தீவில் உள்ள கட்டாரி பாக் கேந்திரிய வித்யாலயாவில் நான்கு சாவடிகளில் மின்சார தடையால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பூத் எண்கள் 132, 133, 134 மற்றும் 135 ஆகியற்றில் மின்சார தடையால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளது.

Next Story