பணியில் உயிரிழந்த காவல் அதிகாரிகளின் தைரியத்தினை நினைவுகூர்கிறேன்; பிரதமர் மோடி


பணியில் உயிரிழந்த காவல் அதிகாரிகளின் தைரியத்தினை நினைவுகூர்கிறேன்; பிரதமர் மோடி
x
தினத்தந்தி 21 Oct 2019 11:26 AM IST (Updated: 21 Oct 2019 11:26 AM IST)
t-max-icont-min-icon

பணியில் உயிரிழந்த காவல் துறை அதிகாரிகளின் தைரியத்தினை பிரதமர் மோடி தேசிய காவலர் தினத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய போலீசார் 10 பேரை கடந்த 1959ம் ஆண்டில் சீன படைகள் சுட்டு கொன்றன.  இதன்பின்பு இந்திய காவலர்கள் சீனாவை ஒட்டிய இந்திய எல்லை பகுதியில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  சீன படையால் கொல்லப்பட்ட இந்திய போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ந்தேதி தேசிய காவலர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து இந்த வருடம் ஆகஸ்டு வரையில் தீவிரவாத ஒழிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 292 போலீசார் பணியின்பொழுது உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) மற்றும் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) உள்ளிட்ட துணை ராணுவத்தினரும் அடங்குவர்.  இவர்களில் பயங்கரவாதிகள் மற்றும் ஊடுருவல்காரர்களுக்கு எதிரான போரில் மிக அதிக எண்ணிக்கையில் 67 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.

இன்று நடைபெறும் காவலர் நினைவு தின நிகழ்ச்சிகளில் 292 பேரின் பெயர்கள் வாசிக்கப்பட உள்ளன.

இதேபோன்று நாடு விடுதலை அடைந்ததில் இருந்து இந்த வருடம் ஆகஸ்டு வரையில் 35,136 போலீசார் நாட்டை பாதுகாக்கும் பணி மற்றும் மக்களை காக்கும் பணியில் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

இதனிடையே, தேசிய காவலர் தினத்தினை முன்னிட்டு பிரதமர் மோடி போலீசாருக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வீர வணக்கம் செலுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பணியில் இருந்தபொழுது கொல்லப்பட்ட வீரம் நிறைந்த நமது காவலர்களை இந்த நாளில் பெருமையுடன் நினைவுகூர்கிறேன்.

காவல் அதிகாரிகள் தங்களது பணிகளை மிகுந்த அக்கறையுடன் செய்து வருகின்றனர்.  அவர்களின் தைரியம் எப்பொழுதும் நம்மை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

Next Story