தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை
தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை வழங்குகிறது.
புதுடெல்லி,
இந்திய ரெயில்வே துறையை தனியார் மயப்படுத்தும் சோதனை முயற்சியாக, டெல்லி-லக்னோ மற்றும் மும்பை-அகமதாபாத் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்களை ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைக்க முடிவாகி உள்ளது.
இவற்றில் டெல்லி-லக்னோ இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தலா ரூ.25 லட்சம் இலவச இன்சூரன்ஸ் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில் பயணிகளுக்கு, லக்னோ சந்திப்பில் ஓய்வு அறை வசதிகளும், புதுடெல்லி ரெயில் நிலையத்தில் சிறப்பு அறை வசதிகளும், கோரிக்கையின் பேரில் கூட்டங்கள் நடத்துவதற்கான அறை வசதிகளும் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் கடந்த 19ந்தேதி காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் 9.55 மணிக்கு புறப்பட்டது. புதுடெல்லிக்கு மதியம் 12.25 மணிக்கு பதிலாக 3.40 மணியளவில் சென்றடைந்தது.
இதேபோன்று புதுடெல்லியில் இருந்து 3.35 மணிக்கு பதிலாக மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு லக்னோ நகருக்கு இரவு 10.05 மணிக்கு வந்தடைவதற்கு பதிலாக 11.30 மணியளவில் வந்து சேர்ந்தது.
லக்னோவில் இருந்து டெல்லி வரையிலான பயணத்தில் 450 பயணிகள் ரெயிலில் இருந்தனர். அவர்களுக்கு தலா ரூ.250 கிடைக்கும். டெல்லி முதல் லக்னோ வரையிலான பயணத்தில் 500 பயணிகள் ரெயிலில் இருந்தனர். அவர்களுக்கு தலா ரூ.100 கிடைக்கும். இந்திய ரெயில்வே வரலாற்றில் முதன்முறையாக, இத்திட்டத்தின்படி மொத்தம் ரூ.1.62 லட்சம் தொகை பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.
ஒரு மணிநேரத்திற்கு மேலான காலதாமதத்திற்கு ரூ.100 மற்றும் 2 மணிநேரத்திற்கு மேலான காலதாமதத்திற்கு ரூ.250 வழங்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்திருந்தது.
Related Tags :
Next Story